புலம்பெயர் தொழிலாளர்கள் புதிய மின்சார வாகன திட்டத்துடன் சூரிய சக்தி அமைப்பை (Solar power system) கொள்வனவு அல்லது இறக்குமதி செய்ய வேண்டும் என்ற கட்டாய நடைமுறை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனத்துடன் அதனை சார்ஜ் செய்வதற்காக சூரிய சக்தி அமைப்பினையும் கொள்வனவு செய்வது கட்டாயம் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், தற்போது முதல் 6 மாதங்களுக்கு இந்த கட்டாய நடைமுறையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
ஜூலை 1ஆம் திகதி முதல் உரிய தொகையை வைப்பிலிட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் இறக்குமதி உரிமத்தை பெற தகுதியுடையவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டம் டிசம்பர் 31ஆம் திகதி வரையான ஆறு மாதங்களுக்கு முதலில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும், இது தொடர்பான அனைத்து விவரங்களுடன் கூடிய சுற்றறிக்கை விரைவில் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறுகையில்,
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் எந்த வகையிலும் இலங்கையில் வாகன இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்படவில்லை. அதனால்தான் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வாகன இறக்குமதி உரிமம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
புலம்பெயர் தொழிலாளரொருவர் தனது சொந்த கணக்கிற்கோ அல்லது உறவினரின் கணக்கிற்கோ 3000 டொலருக்கு மேற்பட்ட பணத்தை வங்கி மூலம் அனுப்பியிருந்தால், அவர்கள் அனுப்பிய பணத்தில் அரைவாசி பணத்திற்கு பெறுமதியான மின்சார மோட்டார் வாகனத்தை வாங்கலாம்.
இதேவேளை 3000 என்பது ஆகக்குறைந்த தொகையாக கொள்ளப்படுகிறது. இருப்பினும், முச்சக்கரவண்டிகளுக்கு இந்த அனுமதி கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு முறைசார் வழிகள் மூலம் பணம் அனுப்பிய புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சலுகைகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு கடந்த 2ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
நாட்டில் நிலவுகின்ற வெளிநாட்டு செலாவணி நெருக்கடிக்குத் தீர்வாக புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்புகின்ற பண அனுப்பல்களை அதிகரிப்பதற்காக வழங்கப்பட வேண்டிய சலுகைகள் மற்றும் ஊக்குவிப்புகள் தொடர்பான விடயங்களை ஆராய்ந்து பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக கடந்த 2022.06.27ஆம் திகதிய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் அலுவலர் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. குறித்த அலுவலர் குழுவின் அறிக்கை மூலம் பல பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த பரிந்துரைகள் மூலம் எமது நாட்டிற்கு முறைசார் வழிகள் மூலம் அனுப்பப்பட்ட வெளிநாட்டுப் பணத்தொகையைக் கருத்தில் கொண்டு குறித்த புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டிற்கு வருகை தரும் போது மேலதிக தீர்வை வரிச் சலுகைக் கொடுப்பனவை வழங்குவதற்கும் மற்றும் இலத்திரனியல் கார் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக குறித்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வசதிகளை வழங்குவதற்கும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் யோசனை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.