மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் மணல் மண் அகழ்வு செய்யப்படும் இடங்களை நேற்றைய தினம் காலை திணைக்கள தலைவர்கள், அரச அதிகாரிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள், உள்ளடக்கிய விசேட குழுவினர் நேரடியாக கள விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
பொது அமைப்புக்களின் ஒன்றியம் மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக குறித்த கள விஜயம் இடம் பெற்றுள்ளது.
மணல் மண் அகழ்வுடன் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் , பிரதேசச் செயலாளர், அரசாங்க அதிபர், ஏனைய சிவில் அமைப்புக்கள், புவிச்சரிதவியல் திணைக்களம், பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல் மற்றும் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக மணல் அகழ்வு இடம்பெற்று வரும் இடங்களை பார்வையிட்டு தொடர்ச்சியாக மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.
குறித்த தீர்மானத்திற்கு அமைவாக நேற்று காலை முதல் மாலை வரை மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மணல் மண் அகழ்வு செய்யப்படும் இடங்களில் நேரடியாக கள விஜயம் மேற்கொள்ளப்பட்டு மண் அகழ்வு இடம் பெறும் இடங்களின் தற்போதைய நிலை குறித்து ஆராயப்பட்டது.
குறித்த முதலாவது கள விஜயத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரின் பிரதி நிதிகள், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர், வனவளத் திணைக்கள அதிகாரி, புவிச் சரிதவியல் திணைக்கள அதிகாரி, பொலிஸார், மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர்,வி.எஸ்.சிவகரன், பொது அமைப்புக்களின் ஒன்றிய பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக்கடவை, கூறாய் போன்ற பகுதிகளுக்கு கள விஜயம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. குறித்த பகுதிகளில் உள்ள ஆறுகளின் தற்போதைய நிலை தொடர்பாகவும், அப்பகுதியின் தற்போதைய நிலை குறித்தும் பார்வையிட்டனர்.
மேலும் குறித்த பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம் பெறுகின்றமை குறித்தும், பழமை வாய்ந்த மரங்கள் அழிவடையும் நிலையில் காணப்படுகின்றமை குறித்தும் நேரடியாக அவதானிக்கப்பட்டது.
அப்பகுதிகளில் வழங்கப்பட்ட அனுமதியை மீறி பாறிய குழிகள் தோண்டப்பட்டு மண் அகழ்வு செய்யப்பட்டு உள்ளமைக்கான அடையாளங்களும் அப்பகுதியில் குறித்த குழுவினரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த குழுவினர் மன்னார் மாவட்டத்தின் ஏனைய பிரதேச செயலாளர் பிரிவுகளில் மணல் அகழ்வு இடம் பெறுகின்ற இடங்களுக்கு நேரடியாக கள விஜயம் செய்து நிலமையை அவதானித்ததன் பின்னர் மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளில் எந்த எந்த இடங்களில் மணல் அகழ்வதற்கான அனுமதி வழங்குவது என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என தெரியவருகிறது.