விண்வெளி மண்டலத்தில் சுற்றி வரும் சீனாவுக்குச் சொந்தமான ராக்கெட் ஒன்று பூமியில் விழக்கூடும் என அஞ்சப்படுகிறது. மனிதர்கள் ஆண்டுக்குப் பல நூறு சாட்டிலைட்களை விண்வெளிக்கு அனுப்பி வருகிறோம்.
இந்த சாட்டிலைட்களை எடுத்துச் செல்லும் ராக்கெட்கள் விண்வெளியிலேயே சுற்றிக் கொண்டு இருக்கும். சில சமயங்களில் இப்படி அனுப்பப்படும் சாட்டிலைட்களின் சில பகுதிகள் பூமியின் புவி ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்படும் சம்பவங்கள் நடைபெறும்.
அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடக்க உள்ளது. பூமியில் விழும் ராக்கெட் சீனா விண்வெளியில் தனக்கென தனியாக ஒரு விண்வெளி ஆய்வு மையத்தை உருவாக்கி வருகிறது.
இதை உருவாக்கத் தேவையான பொருட்களை அவ்வப்போது பூமியில் இருந்து சீனா ராக்கெட் மூலம் அனுப்பும். அப்படித்தான் சமீபத்தில் அந்த விண்வெளி நிலையத்திற்குத் தேவையான பொருட்களை லாங் மார்ச் ராக்கெட் மூலம் சீனா சமீபத்தில் அனுப்பி இருந்தது. இந்நிலையில் அந்த ராக்கெட்டின் சில பகுதிகள் பூமியில் விழக்கூடும் என ஆய்வாளர்கள் கணித்து உள்ளனர்.
இது தொடர்பாக வல்லுநர்கள் கவலைகளை எழுப்பியுள்ளனர். கடந்த காலங்களிலும் கூட பல்வேறு நேரங்களில் சீன ராக்கெட் இதேபோல விண்வெளியில் இருந்து பூமியில் விழுந்து உள்ளது .
இந்த ராக்கெட் சுமார் 22 டன் எடையும் 100 அடி நீளமும் கொண்டதாகும். சமீபத்தில் இந்த ராக்கெட் அனுப்பப்பட்ட நிலையில், இப்போது அது சாட்டிலைட்டை நிலைநிறுத்திவிட்டது. இதையடுத்து நாளை சனிக்கிழமை இந்த ராக்கெட் புவி ஈர்ப்பு விசை காரணமாகப் பூமியை நோக்கித் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் இந்த ராக்கெட் பூமியின் எந்தப் பகுதியில் விழ வாய்ப்பு உள்ளது எனத் தெரியாது என்றே ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். பெரும்பாலும் விண்வெளியில் இருந்து பூமியில் விழும் பொருட்கள் வரும் வழியிலேயே எரிந்து சாம்பல் ஆகிவிடும். அவை அதிவேகமாகப் பூமியை நோக்கி வரும் என்பதால், காற்றுடன் உராயும் போது, அவை அப்படியே பஸ்பம் ஆகிவிடும்.
அதேநேரம் சீனாவின் இந்த ராக்கெட் மற்றவற்றுடன் ஒப்பிடும்போது பெரிதாக உள்ளதன் காரணமாக ராக்கெட்டின் பல துண்டுகள் பூமியில் விழக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ராக்கெட் சுமார் 2,000 கிலோமீட்டர் நீளம் மற்றும் 70 கிலோமீட்டர் அகலமுள்ள பகுதிகளில் பல துண்டுகளாக விழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி நாளை சனிக்கிழமை இரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ராக்கெட்டின் பகுதிகள் பூமியில் விழும் வாய்ப்புகள் மிக அதிகம் என கூறப்படுகின்றது. அதேநேரம் பெரும்பாலும், இவை கடல், பாலைவனம் அல்லது காடுகளில் விழ வாய்ப்பு இருப்பதால், இதனால் மனிதர்களுக்குப் பெரியளவில் ஆபத்து இருக்காது.
அதேநேரம் இவை மனிதர்கள் இருக்கும் பகுதியில் விழுந்தால் இது ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளன. அதேவேளை கடந்த மார்ச் 2020ஆம் ஆண்டு சீனாவின் லாங் மார்ச் 5பி என்ற ராக்கெட்டின் பகுதிகள் மேற்கு ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட் பகுதியில் விழுந்தது. இதனால் அங்குப் பல கட்டிடங்கள் மோசமாகத் சேதம் அடைந்த போதும் , இதில் யாருக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.