2006ஆம் ஆண்டு திருமலையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ். சுகிர்தராஜனின் 16வது ஞாபகார்த்த தின நிகழ்வு நடைபெற்றதுடன் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றுள்ளது.
கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் இ.தேவஅதிரன் தலைமையில் இன்று(24) மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் ஞாபகார்த்த நினைவுத் தூபியில் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன். இணையத்தள ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் பெடிகமகே, மற்று ஏனைய அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சிவில் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது சுகிர்தராஜனின் உருவப்படத்திற்கு சிரேஷ்ட ஊடகவியலாளர் புத்திரசிகாமணி மற்றும் முன்னாள் ஊடகவியலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரனும் இணைந்து மலர் மாலை அணிவித்தனர்.
16 நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தி அகவணக்கமும் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து இதன்போது கலந்து கொண்டோர், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டிய கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
படுகொலை செய்யப்பட ஊடகவியலாளரின் படுகொலைக்கு நீதிவேண்டும் எனவும், ஊடகவியலாளர் கோகிலன் உட்படக் கைது செய்யப்பட்ட முகப்புத்தக செயற்பாட்டாளர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் நினைவு உரைகளும் இடம்பெற்றன. இந்நிகழ்விற்கு வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு ஊடக அமைப்புகளின் ஒத்துழைப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மறைந்த ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 16வது நினைவு தினத்தைத் திருகோணமலை ஊடக இல்லத்தில் இன்று (24) அனுஷ்டித்தனர்.
திருமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு இன்று மாலை இடம்பெற்றது.