ஹொலிவுட்டில் எடுக்கப்பட்டு வரும் புதிய படம் ரஸ்ட். ஜோயல் சோஸா இதனை இயக்கி வருகிறார். மெக்சிகோவில் இதன் படப்பிடிப்பு நடந்த போது துப்பாக்கியால் சுடும் காட்சியை படமாக்கினர். அப்போது நடிகர் அலெக் பால்ட்வின் சுட்டதில், ஒளிப்பதிவாளர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இயக்குனர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
படப்பிடிப்பில் பொதுவாக போலி துப்பாக்கிகளையே பயன்படுத்துவர். ரஸ்ட் படப்பிடிப்பிலும் அப்படி போலி துப்பாக்கிகளே பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. நடிகர் அலெக் பால்ட்வின் சுட்டத்தில் ஒளிப்பதிவாளர் ஹலினா ஹட்சின்ஸ் மீது குண்டு பாய்ந்தது. உடனடியாக அவர் ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே அவர் மரணமடைந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதில் காயமடைந்த மற்றொருவர் இயக்குனர் ஜோயல் சோஸா. அவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். படப்பிடிப்பில் நடந்த அசம்பாவிதத்தில் ஒளிப்பதிவாளர் கொல்லப்பட்டதும், இயக்குனர் படுகாயம் அடைந்ததும் ஹாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மரணமடைந்த ஒளிப்பதிவாளர் ஹலினா ஹட்சின்ஸ்க்கு 42 வயதாகிறது. குறும்படங்கள், தொலைக்காட்சி தொடர்களுக்கு அதிகளவில் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்னோபவுண்ட், டார்லின், பிளைன்ட் ஃபயர் உள்பட பல படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.