அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தை அடுத்து அங்கு கடமையாற்றிவரும அனைத்து பொலிஸாரையும் உடன் இடமாற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இந்த சூட்டு சம்பவம் தொடர்பாக பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணை இடம் பெற்றுவருவதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த 24 ஆம் திகதி இரவு பொலிஸ் சாஜன் ஒருவர் பொலிஸார் மீது மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 4 பொலிஸார் உயிரிழந்ததுடன் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் துப்பாக்கி சூடு நடாத்திய பொலிஸ் சாஜன் துப்பாக்கிகளுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திற்கு பொலிஸ் மா அதிபர், கிழக்கு பிராந்திய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் உட்பட பல பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று நிலமைகளை ஆராய்ந்து இச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரையும் முதலில் இடமாற்றுமாறு ஆலோசனையின் கீழ், கட்டம் கட்டமாக கடமையாற்றிவரும் பொலிஸாரை இடமாற்றும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உட்பட சிலர் உடனடியாக வேறு பொலிஸ் நிலையங்களுக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.