இலங்கை உள்ளிட்ட உலகவாழ் முஸ்லிம்கள் புனித ஹஜ் பெருநாளை இன்று கொண்டாடுகின்றனர்.
இது தியாகத்தின் நினைவாகக் கொண்டாடப்படும் முக்கியமான இஸ்லாமிய திருநாளாகும்.
இஸ்லாமியர்களின் மிகப் புனிதமான ஆன்மீக கடமைகளில் ஒன்றாக ஹஜ் யாத்திரை கருதப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் துல் ஹிஜ்ஜா மாதத்தில் சவுதி அரேபியாவின் மக்கா நகரில் இந்த புனித யாத்திரை நடைபெறுகிறது.
ஒவ்வொரு முஸ்லிமும் வாழ்க்கையில் குறைந்தது ஒருமுறையாவது ஹஜ் செய்ய வேண்டும் என்பது இஸ்லாத்தின் ஐந்து கட்டளைகளில் ஒன்றாகும்.
அந்த வகையில், உலகின் மிகப்பெரிய ஆன்மீக கூடுகைகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த ஹஜ் யாத்திரைக்காக உலகம் முழுவதிலும் இருந்து 18 இலட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் மக்கா நகரில் திரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டில், கடந்த ஆண்டை விட அதிகமான வெளிநாட்டு யாத்திரீகர்கள் வந்துள்ளதாக சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, மினா, அரஃபாத் மற்றும் ஜம்ராத் பகுதிகளுக்கான மெட்ரோ மற்றும் வீதிப் போக்குவரத்து முறைகள் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் கடும் வெப்பம் நிலவுவதால் குடிநீர் விநியோகம், மருத்துவ முகாம்கள் மற்றும் அவசர சிகிச்சை வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், யாத்திரீகர்கள் குடை பயன்படுத்தவும், அதிக தண்ணீர் அருந்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஹஜ் யாத்திரையின் முக்கியமான நிகழ்வாகக் கருதப்படும் அரஃபாத் மலைப்பகுதியில் இலட்சக்கணக்கானோர் கூடி தொழுகை மற்றும் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

