40 வருடத்திற்கு மேலாக இயங்கிவரும் நாட்டின் பிரதான தேசிய அரச தொலைக்காட்சி அலைவரிசையானது அனைத்து மூவின இலங்கையர்களிற்கும் சொந்தமானதாக உள்ள நிலையில், அதில் தமிழ் , ஆங்கில மொழிகள் தற்போது நீக்கப்படுள்ளது.
இந்நிலையில் தேசிய தொலைக்காட்சியானது அதன் தொடக்கத்தில் இருந்து பயன்படுத்திய வண்ணங்கள் மற்றும் பின்னணி இசை அனைத்தும் நாட்டின் அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது.
40 வருடத்திற்கு மேலாக இயங்கிவரும் தேசிய அரச தொலைக்காட்சி மும்மொழிகளை அடிப்படையாக கொண்ட இலட்சினையை காட்சிப்படுத்தி வந்தது. இவ்வாறான நிலையில் பெப்ரவரி 22ம் திகதி முதல் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளை நீக்கி சிங்கள மொழியில் மாத்திரம் தன்னுடைய இலட்சினையை காட்சிப்படுத்தியுள்ளது.
இந்த செயற்பாட்டின் மூலம் தேசிய தொலைக்காட்சியின் அடையாளம் அழிந்து விட்டது என தேசிய தொலைக்காட்சியில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் தேசிய தொலைக்காட்சியில் ஆரம்பகாலத்தில் இருந்து இப்பொது வரை பணியாற்றிவரும் மூத்த ஊடகவியலாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் புதிய தலைவர் சொனால் குணவர்தனவின் ஒழுங்கான முகாமைத்துவம் இன்மையால் தேசிய தொலைக்காட்சி பாரிய நஷ்டத்தை சந்தித்து வருவதாக அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இன நல்லிணக்கத்திற்காக குரல் கொடுக்கும் மூத்த ஊடகவியலாளரான டலஸ் அழகப்பெரும தற்போது ஊடக துறை அமைச்சராக பதவி வகித்து வரும் நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை கவலைக்குரிய விடயம் என மூத்த ஊடகவியலாளர்கள் விசம் வெளியிட்டுள்ளனர்.