ஏ9 வீதியில் பயணித்த சொகுசு கார் ஒன்றினை சோதனையிட்ட போது யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவை சேர்ந்த ஜோடிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த காரில் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ள நிலையிலேயே அதில் பயணித்த இரு இளம் குடும்பங்களை கைது செய்துள்ளதாக ஈரப்பெரியகுளம் பொலிசார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கொழும்பில் இருந்து ஏ9 வீதி ஊடாக வவுனியா நோக்கி சென்ற சொகுசு காரினை ஈரப்பெரியகுளம் பகுதியில் வைத்து பொலிசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதன்போது போது குறித்த காரில் 63.84 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த ஹெரோயின் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்தமை மற்றும் அதனை கொண்டு சென்றமை தொடர்பில் அதில் பயணித்த இரு பெண்கள் உட்பட 4 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இரு இளம் தம்பதிகளே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்கள். கைதானவர்கள் மதவுவைத்தகுளம் மற்றும் சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களுடன் 4 மற்றும் 8 மாதக் குழந்தைகளும் காரில் பயணித்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
மேலும் மேலதிக விசாரணைகளின் கைதான 4 பேரையும் நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.