அமெரிக்காவில் கொரோனா நோய்த்தொற்று பரவலால் 1.2 லட்சம் சிறுவா்கள் தங்களது பெற்றோா் மற்றும் காப்பாளா்களை இழந்துள்ளதாக இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ‘பீடியாட்ரிக்ஸ்’ மருத்துவ இதழில் வெளியாகியுள்ள அந்த அறிக்கை முடிவுகள் தெரிவிப்பதாவது:
அமெரிக்காவில் கொரோனா பரவல் பாதிப்பு ஏற்பட்ட 15 மாதங்களில் 1.2 லட்சத்துக்கு மேற்பட்ட சிறுவா்கள் அவா்களுக்கு ஆதரவளித்து வந்த பெற்றோா்களையோ, தாத்தா மற்றும் பாட்டிகளையோ இழந்துள்ளனா்.
இதுதவிர, 22,000 குழைந்தைகள் அவா்களுக்கு இரண்டாம் நிலையில் ஆதரவளித்து வந்த உறவினா்களை இழந்துள்ளனா்.
கொரோனாவால் ஆதரவற்றவா்களான சிறுவா்களில் பாதிக்கும் மேற்பட்டவா்கள் கருப்பினம் மற்றும் ஹிஸ்பானிக் இனத்தைச் சோ்ந்தவா்களாக உள்ளனா். அந்த இரு இனத்தவா்களும் அமெரிக்க மக்கள்தொகையில் 40 சதவீதம் பங்கு வகிக்கின்றனா்.
கொரோனா நெருக்கடியில் ஆதரவிழந்த சிறுவா்களில் 32 சதவீதத்தினா் ஹிஸ்பானிக் இனத்தவா்களாகவும் 26 சதவீதத்தினா் கருப்பினத்தைச் சோ்ந்தவா்களாகவும் உள்ளனா் என்று அந்த அறிக்கையின் முடிவுகள் தெரிவிக்கின்றன.