திருகோணமலை சண்முகா இந்து கல்லூரிக்கு ஆசியை ஒருவர் ஹபாயா அணிந்து சென்றதனால் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து, மாணவர்கள் வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 2017ஆம் ஆண்டு இப்பாடசாலையில் ஹபாயா பிரச்சினை பாரிய பிரச்சினையாக உருவெடுத்த நிலையில், அப்பாடசாலையில் ஏற்கனவே கடமையாற்றி வந்த ஆசிரியை மீண்டும் பாடசாலைக்கு இன்று சென்றுள்ளார்.
இந்நிலையில் குறித்த பாடசாலை அதிபர் காரியாலயத்தில் கடமை பொறுப்பேற்க சென்றபோது பாடசாலை சமூகத்திற்கும் குறித்த பெண் ஆசிரியருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பாடசாலையின் அதிபரை ஹபாயா அணிந்து வந்த ஆசிரியை தாக்கியதாகவும்கூறப்படுகின்றது. அதேவேளை ஹபாயா அணிந்து வந்தமையால் கோபம் கொண்ட அதிபர் தன்னை தாக்கியதாக கூறியதுடன், அதிபர் மற்றும் ஆசிரியையும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை திருகோணமலை சண்முக இந்து மகளிர் கல்லூரியில் இருந்து ஹபாயா அணிந்து சென்ற காரணமாக வெளியேற்றப்பட்ட ஆசிரியை பாத்திமா பஹ்மிதா நீதிமன்றத்தில் இருதரப்பிற்குமிடையில் ஏற்பட்ட புரிந்துணர்வின் காரணமாக இன்று மீண்டும் பாடசாலைக்கு கடமை ஏற்க சென்றுள்ளார்.
இதன் போது பாடசாலைக்குள் கூடியிருந்த வெளியாட்கள் சிலரால் மிரட்டப்பட்டது மாத்திரமல்லாமல் கூட்டத்தில் இருந்த ஒருவரால் ஆசிரியையின் கழுத்து நெரிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
2017ல் அபாயா அணிந்து கற்பிக்கச் சென்ற ஆசிரியைகளை அபாயா அணிந்து வந்ததன் காரணமாக பாடசாலையை விட்டு சண்முக கல்லூரி நிர்வாகம் வெளியேற்றியிருந்தது. அதைதொடந்து மனித உரிமை ஆணைக்குழுவில் ஆசிரியைகள் செய்த முறைப்பாட்டை விசாரித்த ஆணைக்குழு ஆசிரியைகளின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக முடிவு செய்ததுடன், வெளியேற்றப்பட்ட ஆசிரியைகளை மீள சண்முக இந்து கல்லூரிக்கு உடனடியாக அனுமதிக்குமாறும் கூறியது.
எனினும் மனித உரிமை ஆணைக்குழுவின் பரிந்துரை வெளியாகி வருடங்களாகியும் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் அதனை நடைமுறைப்படுத்தக் கோரி பாதிக்கப்பட்ட ஆசிரியைகளில் ஒருவரான ஆசிரியை பஹ்மிதா ரமீஸ் மேல் முறையீட்டு நீதி மன்றத்தில் ரிட் மனுவொன்றைத் தாக்கல் செய்தார்.
குறித்த வழக்கு சென்ற மாதம் விசாரணைக்கு வந்தபோது அரச தரப்பு இணக்கப்பாட்டிற்கு வருவதாகக் கூறியதைத் தொடர்ந்து அதனை ஏற்றுக் கொண்ட மனுதாரரான ஆசிரியை பஹ்மிதா தான் மீண்டும் சண்முகவிற்கு அனுமதிக்கப்படவேண்டும் என கேட்டிருந்தார்.
அதனை ஏற்றுக் கொண்ட அரச தரப்பு இன்று ஆசிரியை பஹ்மிதாவை மீண்டும் சண்முக இந்து கல்லூரிக்கு கடமையை ஏற்குமாறு அனுமதித்ததுடன் அதற்கான கடிதத்தினையும் கல்வி அமைச்சு அனுப்பியிருந்தது.
அதன் பிரகாரம் இன்று கடமையேற்கச் சென்ற ஆசிரியை பாத்திமா பஹ்மிதாவை அதிபரின் காரியாயலயத்தில் கூடியிருந்த பலர் தடுத்ததாக கூறப்படுகின்றது.
அத்துடன் தகாத வார்த்தை பிரயோகங்களையும் மேற்கொண்டதுடன் , கூட்டத்தினுள் இருந்த ஒருவர் ஆசிரியை பஹ்மிதாவின் கழுத்தை நெரிக்க முயற்சித்ததுடன் தொலைபேசியை பறிக்க முயன்றுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட ஆசிரியை தெரிவித்தார்.
இந்த குறித்த விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் மற்றும் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.