கிண்ணியா – குறிஞ்சாக்கேணி படகு விபத்துடன் தொடர்புடைய மற்றுமொரு பெண்ணொருவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் நேற்றிரவு (04) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்த பெண் கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான சக்கரிய்யா காலிஸா (42) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த நவம்பர் மாதம் 23 ஆம் திகதி குறிஞ்சாக்கேணி படகுகவிழ்ந்ததில் நீரில் மூழ்கிய நிலையில் படுகாயமடைந்த குறித்த பெண் கிண்ணியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலைக்கும் பின்னர் திருகோணமலையிலிருந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கும் மேலதிக சிகிச்சைக்காக அனுப்பப்பட்டிருந்த நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
அந்த வகையில் கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த பெண்ணின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் கிளிநொச்சி வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.