கற்பிட்டி கப்பலடி கடற்கரைப் பகுதியில் நேற்று (06) மாலை சூட்சுமமான முறையில் கடலாமையை உரைப் பையில் மறைத்து கொண்டு செல்ல முற்பட்ட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் விஷேட புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைக்கெப்பெற்ற தகவலுக்கமைய கற்பிட்டி பொலிஸாருடன் இனைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது கற்பிட்டி, கொச்சிக்கடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கடலாமை ஒலிவ நிற (Olive Redly) வகையைச் சார்ந்தது என வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
குறித்த கடலாமை இறைச்சிக்காக பயன்படுத்துவதற்காக பிடிக்கப்பட்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரையும் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களிடமிருந்து மீட்கப்பட்ட குறித்த கடலாமை காயங்களுக்குள்ளாகிய நிலையில் காணப்பட்டமையினால் சிகிச்சையளிப்பதற்காக கற்பிட்டி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.