ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட மூன்று ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கொழும்பு பிரதான நீதவான் நிராகரித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம், நாரஹேன்பிட்டி பொலிஸார், கொழும்பில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட மூவரை கைது செய்துள்ளனர்.
இதன்போது பொலிசாரால் கடுமையக தாக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், நீதித்துறை மருத்துவ அதிகாரிகளால் கட்டாய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அவர்கள் எந்த பாலியல் செயலிலும் பங்கேற்கவில்லை என்பதுடன், அவர்கள் அறையில் மது அருந்திவிட்டு உணவருந்திக்கொண்டிருந்தமை தெரிய வந்தது.
இந்நிலையில் ஹோட்டல் குளியலறையில் திறக்கப்படாத ஆணுறை பாக்கெட்டை கைப்பற்றிய பொலிசார் , அந்த மூவரையும் கைது செய்ய அந்த சாட்சியத்தை பயன்படுத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதனையடுத்து கைதான சுவீடன் பிரஜை, பொலிசாரின் அறிவுறுத்தலின் பேரில் நீதித்துறை மருத்துவ அதிகாரிகளால், பரிசோதனைகளிற்கு கட்டாயப்படுத்தியதற்கான ஆதாரங்களையும் விசாரணையில் சமர்பித்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
இலங்கை பொலிசாரின் கைகளில் தனக்கு ஏற்பட்ட துன்பகரமான அனுபவத்தை விவரிக்கும் மனுவில், சித்திரவதை, கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற மற்றும் இழிவான முறையில் நடத்தப்பட்டதாவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
அதோடு , பொலிஸ் அதிகாரிகள் அவரை கம்பிகளால் கட்டி, மேலும் ஓரினச்சேர்க்கையை நிரூபிக்கும் முயற்சியில் அவரை பரிசோதனை செய்ய கட்டாயப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை ஓரினச்சேர்க்கை சமூகத்திற்கு எதிரான பாகுபாடு அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும், அரசியலமைப்பின் 12 வது பிரிவின் கீழ் சமத்துவம் மற்றும் பாகுபாடுகளில் இருந்து சுதந்திரம் பெறுவதற்கான உரிமையை மீறுவதாகவும் 2014 ஆம் ஆண்டு முதல் சட்டமா அதிபர் தொடர்ந்து கூறி வருகிறார்.
எனினும், ஓரினச்சேர்க்கை சமூகத்தை கைதுசெய்து வழக்குத் தொடர பொலிஸார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். இவ்வாறான நிலையில் ஓரினச் சேர்க்கையாளர்களிற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்யும் முடிவை, சட்டமா அதிபர் எடுத் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
அண்மையில், பொலிசாரால் நடத்தப்பட்ட ஓரினச்சேர்க்கையாளர்களிற்கு எதிரான பயிற்சி அமர்வுகளை இடைநிறுத்தும்படி, ஓரினச்சேர்க்கை சமூகத்தால், பொலிஸாருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது