இந்தியா பெங்களூரு ஜக்கூர் பகுதியில் மரம் ஒன்றில் ஒரே சேலையில் தூக்கில் தொங்கிய நிலையில் நேபாளத்தைச் சேர்ந்த இளம்பெண்கள் இருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், இது தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணை
பெங்களூரு எலகங்கா பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஜக்கூர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அருகிலுள்ள காலி நிலப்பகுதியில் இருந்த மரத்திலேயே நேற்று காலை இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்த பொலிஸார், இரு பெண்களின் சடலங்களையும் மீட்டு விசாரணைகளை ஆரம்பித்தனர்.
முதற்கட்ட விசாரணைகளில், உயிரிழந்தவர்கள் நேபாளத்தைச் சேர்ந்த 22 வயதுடைய சைஜனா மற்றும் 23 வயதுடைய ரீட்டா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சைஜனா அம்ருதஹள்ளி பகுதியிலும், ரீட்டா பிரேசர் டவுன் பகுதியிலும் வசித்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவரும் சுமார் 15 நாட்களுக்கு முன்னரே நேபாளத்தில் இருந்து பெங்களூருவுக்கு வந்திருந்ததுடன், அங்கு வீட்டு வேலைகளில் ஈடுபட்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இருவரும் ஒரே சேலையைப் பயன்படுத்தி மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
இருவரும் தற்கொலை செய்துகொண்டார்களா அல்லது வேறு நபர்கள் அவர்களை கொலை செய்து பின்னர் மரத்தில் தூக்கில் தொங்கவிட்டார்களா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே மரணத்திற்கான காரணம் தொடர்பில் தெளிவான தகவல்களைப் பெற முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

