அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரான் தலைநகர் தெஹ்ரானில் கடந்த பிப்ரவரி மாதம் நடத்திய திடீர் வான்வழித் தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டார்.
இந்தத் தாக்குதலில் கமேனியுடன் சேர்த்து அவருடைய மூத்த மகள், மருமகன், மருமகள் மற்றும் 14 மாதமே ஆன அவரது பேத்தி ஜஹ்ரா முகமது கோல்பயேகானி ஆகியோரும் பலியாயினர்.
இறுதிச்சடங்கு
அதைத் தொடர்ந்து இருதரப்பிற்கும் இடையே தீவிர போர் வெடித்ததால், பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களின் இறுதிச்சடங்குகளை உடனடியாக நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டது.
அவர்களது உடல்கள் குளிரூட்டப்பட்ட ரகசிய அறையொன்றில் கடந்த நான்கு மாதங்களாகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது
இந்த நிலையில், தற்போது போர்ப் பதற்றம் ஓரளவுக்குக் குறைந்து, அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து, அவர்களது உடல்களுக்கான இறுதிச்சடங்கு முறையான அரசு மரியாதையுடன் நேற்று தெஹ்ரானில் தொடங்கியுள்ளது.
பொதுமக்களின் அஞ்சலிக்காக தெஹ்ரானில் உள்ள இமாம் கொமேனி கிராண்ட் மொசல்லா வளாகத்தில் இவர்களது உடல்கள் வைக்கப்பட்டுள்ளதுடன், அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதன்போது, ஈரான் தேசியக் கொடியால் போர்த்தப்பட்டிருந்த பெரிய சவப்பெட்டிகளுக்கு நடுவே வைக்கப்பட்டிருந்த கமேனியின் 14 மாத பேத்தி ஜஹ்ராவின் சிறிய சவப்பெட்டி அங்கு திரண்டிருந்த ஒட்டுமொத்த மக்களையும் உலுக்கியுள்ளது.
இந்நிலையில், போரின் கோர முகத்தையும், அது அப்பாவி குழந்தைகள் மீது நிகழ்த்தும் கொடூரத்தையும் அஞ்சலி செலுத்த வந்தவர்களின் நெஞ்சங்களில் இந்தத் துயரக் காட்சி ஆழமாக எடுத்துரைத்துள்ளது.

