மட்டக்களப்பு – ஜெயந்திபுரத்தில் பெண் ஒருவரின் உறவினர் மீது மேற்கொண்ட வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாள்வெட்டு குழுவைச் சேர்ந்த 7 பேரை வாள், கத்தியுடன் நேற்று(19) இரவு கைது செய்துள்ளதாகத் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரதேசத்திலுள்ள சேர்ந்த பெண் ஒருவரை இளைஞர் ஒருவர் காதலித்து வந்துள்ளதாகவும் அப்பெண்ணுக்கு விருப்பமில்லாத நிலையில் அவரை குறித்த இளைஞன் பின் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளதாகவும் பெண்ணின் உறவினருக்கும் குறித்த இளைஞனுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுவந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 9ம் திகதி ஞாயிற்றுக்கிழமை குறித்த பெண்ணை காதலித்து வரும் இளைஞர் அவரது குழுவினருடன் பெண்ணின் உறவினர் மீது மேற்கொண்ட வாள்வெட்டு தாக்குதல் சம்பவத்தில் பெண் ஒருவர் உட்பட 7 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்ட குழுவினர் அங்கிருந்து தப்பி ஓடித் தலைமறைவாகி இருந்த 7 பேரை நேற்று இரவு பொலிஸார் கைது செய்ததுடன், அவர்களிடமிருந்து வாள் மற்றும் கத்திகளை மீட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.