கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த நெதுன்கமுவே ராஜா என்ற யானையின் மரணம் இலங்கை வாழ் மக்களை மிகுந்த சோகத்திற்குள்ளாக்கியிருந்தது.
குறிப்பாக சிங்கள மக்களிடத்தில் தெய்வமாகப் போற்றப்பட்டு வந்த இந்த யானையின் இழப்பானது சிங்கள சமூகத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
இலங்கையில் மிக உயரமான யானையாகவும் தனக்கென்ற தனி தனித்துவத்தைப் பெற்ற ஒன்றாகவும், தலதா மாளிகையில் பல முறை புனித சின்னங்கள் அடங்கிய பேழையை சுமந்துச் சென்ற பெருமைக்குரிய யானையாகவும் இந்த நெதுன்கமுவே ராஜா யானை பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில், 20 வருடங்களுக்கு மேல் குறித்த யானையின் பாகனாக செயற்பட்ட களு மாமா என அழைக்கப்படும் வின்சன்ட் கொடித்துவக்கு என்ற நபர் தற்போது மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தனக்கும், நெதுன்கமுவே ராஜாவுக்கும் இடையிலான உறவு தொடர்பில் களு மாமா விபரிக்கையில்,
நெதுன்கமுவே ராஜாவின் இழப்பினால் நான் மிகவும் துயரம் அடைந்துள்ளேன். எந்நேரமும் அதே நினைவாக உள்ளது. எனது நண்பனைப் போல இருந்தது. அடிக்ககூட மாட்டேன். என்னுடைய பிள்ளை போல நான் பார்த்துக் கொண்டேன். எனது குடும்பத்தில் ஒருத்தரைப் போலத்தான் நெதுன்கமுவே ராஜா. என் உயிரைப் போல இருந்தது.
நான் எப்போதும் நெதுன்கமுவே ராஜாவுடனேயே இருப்பேன். மூன்று மாதங்களுக்கு ஒரு முறைத்தான் எனது ஊருக்குச் சென்று எனது வீட்டாரைப் பார்த்து விட்டு வருவேன்.
காலையில் 10 மணியளவில் யானையை குளிக்க அழைத்துச் செல்வேன். தண்ணீரில் இருப்பதென்றால் யானைக்கு மிகுந்த விருப்பம். காலை 10 மணியளவில் இருந்து மாலை 4 மணி வரை தண்ணீரில் இருந்து குளிக்கும். நீரில் இருப்பதை அதிகம் விரும்பினார் நெதுன்கமுவே ராஜா. இப்போது அவர் இல்லை என்பதை என்னால் யோசிக்கக் கூட முடியவில்லை.
சம்பவம் நடந்த அன்று காலை 5.30 மணிக்கு வந்து சாப்பாடு கொடுத்துவிட்டு கூப்பிட்டேன் எழுந்திருக்கவில்லை. அதுதான் அவரின் இறுதி தருணம். ஒரு நாளைக்கு இரவில் 3 தடவை வந்து பார்த்து செல்வேன். மதம் பிடித்திருந்ததால் அந்நேரம் நான் அருகில் செல்லவில்லை.
யானைக்கு நோய் எதுவும் இருந்ததில்லை. இருபது வருடங்களுக்கு அதிகமான நான் நெதுன்கமுவே ராஜாவுடன் இருக்கின்றேன். விலங்குகளும் மனிதரைப் போலத்தான். நான் நினைக்கின்றேன் யானைக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று.
எனக்கு தெரிந்து அவர் இதுவரை வாகனங்கள் எதிலும் சென்றதில்லை. வாகனங்களில் செல்வதற்கு அவருக்கு விருப்பமும் இல்லை. இலங்கை முழுதும் எங்கு செல்ல வேண்டும் என்றாலும் நடந்தே செல்லும். உடன் நானும் சென்றிருக்கின்றேன். தினமும் நாங்கள் இருவரும் கிட்டத்தட்ட 20 கிலோ மீட்டர் வரை நடந்து சென்று வருவோம்.
தற்போது நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து தலதா மாளிகைக்கு செல்ல ஐந்து நாட்களாகும். அவ்வாறு போகும் சந்தர்ப்பங்களில் இரு இடங்களில் நிறுத்தி செல்லுவோம். உணவுகளை மிகவும் அவதானித்தே கொடுப்போம். அது வெளியில் செல்லும்போது இராணுவ பாதுகாப்பு இருக்கும். எந்த குழப்பமும் செய்வதில்லை. மிகவும் அமைதியாக இருக்கும்.
நான் நெதுன்கமுவே ராஜா மீது மிகவும் பாசமாக இருந்தேன். அவரும் என்மேல் அப்படித்தான் மிகவும் பாசமாக இருந்தார். யாரிடமும் வம்புக்குச் சென்றதில்லை. எனது மனைவி இறந்தபோது கூட என்னால் செல்ல முடியவில்லை. அந்நேரம் பெரஹர நடந்து கொண்டிருந்தது. எனவே நான் ராஜாவுடன் இருக்க வேண்டியிருந்தது. பெரஹர அனைத்தும் முடிந்ததும் ராஜாவை கவனமாக கொண்டு சென்று விட்டுவிட்டுத் தான் எனது மனைவியின் இறுதிக்கிரியைக்கு சென்றேன்.
எனக்கு மிகவும் துயரமாக உள்ளது. எனது மனைவியை விட நேசித்தேன். சிறப்பு பிரார்த்தனை செய்ய உள்ளோம். அவருக்காக தானம் கொடுக்கப் போகின்றேன்.
ராஜா யானை எப்போதும் இருக்கும் இடத்தை வந்து வந்து பார்த்து செல்கின்றேன். ஆனால் யானை அங்கு இல்லை என்பது எனக்கு மிக துயரமாக உள்ளது.
இனிமேல் நான் எந்தவொரு யானையையும் கவனித்துக் கொள்ள போவதில்லை. என்னால் மற்றுமொரு யானையை பார்த்துக் கொள்ள முடியும். ஆனால் ராஜாவைப்போல ஒருவர் எனக்கு கிடைக்கப் போவதில்லை.
எனது 15 வயதில் இருந்து யானை பார்த்துக் கொள்கின்றேன். இது போல ஒரு யானையை நான் இதுவரை பார்த்ததில்லை. இன்னும் இரண்டு நாளில் எனது ஊருக்கு செல்கின்றேன். இந்த இடத்தில் இருப்பது மிக துயரமாக இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.