உள்நாட்டு விவசாயிகளிடமிருந்து கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனம் மூலம் நேரடியாக உருளைக்கிழங்குகளைக் கொள்முதல் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி, அந்த உருளைக்கிழங்குத் தொகைகளை லங்கா சதொச நிறுவனத்திடம் ஒப்படைத்து, அதன் சில்லறை விற்பனை வலையமைப்பின் ஊடாக நுகர்வோருக்கு விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு உருளைக்கிழங்கு விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக, அரசாங்கத்தினால் தற்போது இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மீது ஒரு கிலோகிராமுக்கு 80 ரூபாய் விசேட வர்த்தகப் பண்ட வரி விதிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இடைத்தரகர்கள் மற்றும் மொத்த வியாபாரிகளினால் ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்குக்கு 200 ரூபாய் முதல் 220 ரூபாய் வரையிலான பண்ணை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரவிருக்கும் நாட்களில் அறுவடை அதிகரிக்கும் போது விலைகளில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படக்கூடும் என்பதால், உள்நாட்டு விநியோகத்தைப் பாதுகாக்கவும், விவசாயிகளுக்கு நிலையான சந்தையை வழங்கவும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ஆகியோரினால் இந்த கூட்டு யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

