புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட விவசாய கிராமங்களில் என்றும் இல்லாத வகையில் ஈக்களின் தொல்லை அதிகரித்துக் காணப்படுவதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
முந்தல் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கட்டைக்காடு, பூனைப்பிட்டி, கொத்தாந்தீவு, சின்னப்பாடு, பள்ளிவாசல்பாடு மற்றும் புபுதுகம உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக இவ்வாறு ஈக்களின் தொல்லை அதிகரித்துக் காணப்படுவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்தப் பகுதிகளில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கோழிகளின் மலங்களை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் சேதன பசளைகளை விவசாயிகள் பயன்படுத்துவதால் இவ்வாறு ஈக்கள் அதிகளவில் காணப்படுவதாக மக்கள் கூறுகின்றனர்.
அரச உத்தியோகத்தர்களின் சிரமங்கள்
இதனால், இந்தப் பகுதிகளில் உள்ள வீடுகள், ஹோட்டல்கள் மற்றும் அரச அலுவலகங்கள் என்பனவற்றில் அதிக ஈக்கள் காணப்படுவதால் பொதுமக்களும், ஹோட்டல்களுக்கு உணவு தேவைக்காக வரும் மக்களும், அரச அலுவலங்களில் பணிபுரியும் அரச உத்தியோகத்தர்களும் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ஈக்களின் அதிக வருகை காரணமாக நோய் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புக்கள் உள்ளதாகவும் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஈக்கள், அவற்றின் கால்கள், இறக்கைகள், ரோமங்கள் மூலம் ஆபத்தான பாக்டீரியாக்களை, ஓரிடத்தில் இருந்து, மற்றோர் இடத்திற்கு பரப்புகின்றன.
அவற்றின் கால்களில் ஒட்டியிருக்கும் ஆபத்தான பாக்டீரியாக்கள், உணவுகள் உடலுக்குள் செல்லும் போது, காய்சல், வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி போன்ற நோய்கள் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதாகவும் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
கடந்த சில வருடங்களுக்கு முன், மத்திய மாகாணத்தில் சிறிய வகை ஈக்களினால் “லிஸ்மானியஸ்” எனும் தோல் நோயொன்று பரவுவியதை ஞாபகப்படுத்திய மக்கள் முந்தல் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மேற்கூறப்பட்ட கிராமங்களில் காணப்படும் ஈக்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.