இலங்கையில் வாகனங்களின் விலைகள் மேலும் அதிகரித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
உலகளாவிய கோவிட் தொற்றுநோய் பரவலை தொடர்ந்து ஏற்பட்ட டொலர் நெருக்கடி காரணமாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மோட்டார் வாகன இறக்குமதி நிறுத்தப்பட்டது.
வாகன இறக்குமதி நிறுத்தப்படுவதற்கு முன்னர் வருடாந்தம் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் மோட்டார் வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளின் மொத்த எண்ணிக்கை ஐந்து இலட்சமாகும். அதற்கமைய, 2015 – 2019ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 2.5 மில்லியனுக்கும் அதிகமான மோட்டார் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
எனினும் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள வாகன இறக்குமதிக்கான தடை காரணமாக, வாகன சந்தையில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தற்போது, ஒவ்வொரு வாகனமும் பெறுமதியை விடவும் பல மடங்கு அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதால், வாகனம் வாங்குவது என்பது கனவாகவே மாறிவிட்டதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை வாகன இறக்குமதித் துறையில் வேலைவாய்ப்பைச் சார்ந்து இருப்பவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சமாகும். அவர்களில் பெரும்பாலானோர் வேலை இழந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.