இலங்கையில் அண்மை காலமாக சில விடயங்கள் பேசுப்பொருளாக மாறிவருகின்றது.
அந்தவகையில், எரிவாயு வெடிப்பு, எரிவாயு பற்றாக்குறை, உணவுப்பொருள் தட்டுப்பாடு, டொலர் தட்டுப்பாடு, மரக்கறிகளின் விலை அதிகரிப்பு, எரிப்பொருட்களின் விலை உயர்வு,பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு, முச்சக்கர வண்டிகளின் கட்டண அதிகரிப்பு, திடீர் மின் வெட்டு, நீர் வெட்டு, வாகன இறக்குமதிகளுக்கு தடை என பட்டியல் நாளாந்தம் அதிகரித்துகொண்டே செல்கின்றது.
இதேவேளை, பல பகுதியில் மக்கள் சில பொருட்களை கொள்வனவு செய்வதற்கு பல மணி நேரம் வரிசையில் காத்துகிடக்கின்றனர். இலங்கையில் திடீரென இவ்வாறு பல பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான காரணம் என்ன? என்பது பலர் மனதில் தினந்தோறும் எழும் கேள்விகளில் ஒன்றாகவும் உள்ளது.
இலங்கையில் 1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில், அரிசி, கோதுமை மா, தானிய வகைகள், ஆடைகள் என அனைத்து விதமான பொருட்களுக்கும் பாரிய தட்டுப்பாடு நிலவியதுடன், அந்த காலப்பகுதி பஞ்சம் போன்று எதிர்வரும் காலங்களிலும் நாட்டில் பாரிய உணவு தட்டுப்பாட்டினால் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்ட வண்ணம் உள்ளது.
சமீபத்தில், இரசாயன உரம் மற்றும் கிருமிநாசினி இறக்குமதியை ஜனாதிபதி தடை செய்திருந்தார். இதற்கு எதிராக பல பகுதிகளில் விவசாயிகளினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இரசாயன உர பயன்பாட்டிலிருந்து நீங்கி, சேதனப் பசளையை பயன்படுத்துவதாக எடுத்த முடிவை நிராகரிக்கும் நோக்கம் அரசாங்கத்திடம் இல்லை எனவும் அறிவித்திருந்தது. பின்பு செய்கை உர இறக்குமதிக்கு அனுமதி வழங்கிய அரசாங்கம், செய்கை உரத்திற்கு மானியம் வழங்கப்படாது என அறிவித்திருந்த நிலையில், டொலர் தட்டுப்பாடு காரணமாக உர இறக்குமதிகளை முன்னெடுக்க முடியாது இறக்குமதியாளர்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்த நிலையில், மஞ்சள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களின் விலைகள் பாரிய அளவிற்கு உயர்ந்துள்ளன. தற்போது மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கும், உணவு தட்டுப்பாடுகளுக்கும், மரக்கறிகளின் விலை உயர்விற்கும் இவையே காரணமாக அமைந்துள்ளன.
இதையடுத்து, இலங்கை முழுவதும் சமையல் எரிவாயு, மண்ணெண்ணை, பால்மா உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மக்கள் வரிசைகளில் நிற்பதை காண முடிகின்றது.
இதேவேளை, டொலர்கள் பற்றாக்குறையால், சீனி உட்பட்ட பொருட்கள் அடங்கிய 1,300 க்கும் அதிகமான கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இப்படியான ஒரு சூழ்நிலையில் நாட்டில் மக்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் கையிருப்பில் போதியளவு உள்ளதாகவும்,உணவு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லையென்றும் அரசாங்க தரப்புகள் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.