கொரோனா பரவலால் பாதிக்கப்பட்ட மத்திய மற்றும் ஊவா மாகாண மக்களின் சமூக பொருளாதாரத்தை வலுப்படுத்தும் ஒப்பந்தத்தில் பொது நிர்வாக அமைச்சும் தென் கொரிய ஒத்துழைப்பு முகவரகமும் (KOICA) கைச்சாத்திட்டுள்ளன.
இலங்கை மக்களுக்கு 6 மில்லியன் டொலர் வழங்கவுள்ள பிரபல நாடு! | South Korea 6 Million Usd Give Sri Lanka Covid19
பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் தினேஷ் குணவர்தன இந்த உடன்படிக்கையில் ஈடுபடுவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.
இது தொடர்பான உடன்படிக்கையில் பொது நிர்வாக அமைச்சின் சார்பில் அதன் செயலாளர் பிரியந்த மாயாதுன்னேமற்றும் கொய்கா (KOICA) நிறுவனம் சார்பில் அதன் இலங்கை பணிப்பாளர் கிம் மியுங் ஜின் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்தத் திட்டம் குடிநீர் வசதிகளை மேம்படுத்துதல், சுகாதார வசதிகளை மேம்படுத்துதல், தனிநபர் பாதுகாப்பை மேம்படுத்துதல், ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்துதல், அறுவடைக்குப் பிந்தைய சேதங்களைக் குறைத்தல் மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் குடும்ப வருமானத்தை அதிகரிக்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2022 முதல் 2025 ஆம் ஆண்டு வரை செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்திற்கு 6 மில்லியன் அமெரிக்க டொலர்களை மானியமாக வழங்க தென் கொரிய ஒத்துழைப்பு முகவரகம் ஒப்புக் கொண்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா, வலப்பனை, ஹங்குரன்கெத்த, கொத்மலை மற்றும் அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பதுளை மாவட்டத்தின் மஹியங்கனை, ரிதீமாலியத்த, ஹல்துமுல்ல, பதுளை, வெலிமடை மற்றும் பண்டாரவளை பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதன்படி நுவரெலியாவில் 72,400 குடும்பங்களும் பதுளைவில் 19,350 குடும்பங்களும் இதன் மூலம் பயனடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.