பொருளாதார சிக்கலில் தவித்துவரும் லெபனான் நாட்டில் தற்போது மின்சார உற்பத்தி முற்றிலும் நின்றுபோனது.
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நாட்டின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையங்களான டெய்ர் அம்மர், ஜஹ்ரானி ஆகிய இரண்டும் இயங்குவது நின்றதாக ராய்டர்ஸ் செய்தி முகமையிடம் அரசு அதிகாரி ஒருவர் கூறினார்.
இதையடுத்து மின் தொகுப்பு “சனிக்கிழமை நண்பகலில் முற்றிலும் நின்றுபோனது” என்றும் மேலும் பல நாள்களுக்கு இது மீண்டும் செயல்பட வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார்.
கடந்த 18 மாதங்களாக லெபனான் தீவிரமான பொருளாதார சிக்கலில் தவித்துவருகிறது.
இதனால், மக்கள் வறுமையில் வாடுகின்றனர். அந்நாட்டின் பணம் மதிப்பிழந்துள்ளது. அரசியல் தலைவர்களுக்கு எதிரான பெரிய போராட்டங்கள் நடந்து வருகின்றன. அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக வெளிநாட்டு எரிபொருள் சப்ளையர்களுக்கு பணம் தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
முன்பே ஏராளமான லெபனான் மக்கள் தங்கள் மின்சாரத் தேவைக்கு சொந்தமாக வைத்திருக்கும் டீசல் ஜெனரேட்டர்களையே நம்பி இருந்தனர்.
ஆனால், எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இந்த ஜெனரேட்டர்களைப் பயன்படுத்துவது மேலும் மேலும் செலவு பிடிக்கக்கூடியதாக ஆகிறது.
இப்போது தேசிய மின் தொகுப்பு முற்றிலும் செயலிழந்த நிலையில், மொத்த தேவைக்கும் இப்படி டீசல் ஜெனரேட்டர்கள் தயாரிக்கும் மின்சாரம் போதுமானதாக இருக்காது.
இப்படி முழு மின் தொகுப்பும் செயலிழப்பதற்கு முன்பேகூட மக்கள் ஒரு நாளைக்கு வெறும் 2 மணி நேர மின்சாரமே பெறும் நிலை அவ்வப்போது ஏற்பட்டுவந்தது.
சனிக்கிழமை இயக்கத்தை நிறுத்திக்கொண்ட இரண்டு பெரிய மின் உற்பத்தி நிலையங்களும் நாட்டின் மின்சாரத் தேவையில் 40 சதவீதத்தை நிறைவு செய்துவந்தவை என்று லெபனான் அரசு மின்சார நிறுவனம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“மின் உற்பத்தி மீண்டும் விரைவில் தொடங்குவதற்கு சாத்தியம் இருப்பதாகத் தெரியவில்லை ” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பூரண மின்வட்டினால் கோபம் கொண்ட மக்கள் டிரிபோலி நகரில் சாலையை மறித்து டயர்களை எரித்துப் போராடுவதாகவும், நாட்டின் வட பகுதியில் உள்ள ஹால்பா நகரிலும், அரசு மின்சார நிறுவன அலுவலகங்களுக்கு வெளியிலும் மக்கள் போராடிவருவதாகவும் அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.