உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதை ஒத்திவைக்கும் அதிகாரம் அமைச்சருக்கு இருப்பது நியாயமானதல்ல எனவும், அதனை தேர்தல்கள் ஆணைக்குழுவே நடத்த வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜீ.புஞ்சிஹேவா கூறுகிறார்.
இதன்காரணமாக உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்கும் அதிகாரத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சரின் அதிகாரங்களின் பிரகாரம் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் வரை பிற்போடப்பட்ட போதிலும், செப்டெம்பர் மாதத்தின் பின்னர் உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இருக்கு எனவும், அதன் பிரகாரம் தேர்தல் கூடிய விரைவில் நடத்தப்படும் நடைபெறும் எனவும் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
பல வருடங்களாக ஒத்திவைக்கப்பட்ட மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் வலியுறுத்துகின்றார்.
தேர்தல் முறை திருத்த தீர்மானம் காரணமாக மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவில்லை இருப்பினும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பொதுச் சட்டத் திருத்தங்களின் ஊடாக பழைய முறைமையிலேயே தேர்தலை நடத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவும் தெரிவுக்குழுவில் சுட்டிக்காட்டியுள்ளதாக கூறும் தலைவர், தேவையான சட்ட திருத்தங்களை மேற்கொண்டு மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டுமென என மேலும் குறிப்பிடுகின்றார்.