அனுராதபுரத்தை அண்மித்த பாடசாலை ஒன்றின் அதிபரை பாழடைந்த வீட்டிற்கு அழைத்துச் சென்று, நிர்வாணமாக்கி, சம்பவத்தை கையடக்கத் தொலைபேசியில் வீடியோ பதிவு செய்த ஆசிரியை ஒருவரின் கணவர் நேற்று முன்தினம் (22) கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிபர் தற்போது அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலுக்கு உள்ளான அதிபர், சந்தேகநபரின் பிள்ளைக்கு புலமைப்பரிசில் மேலதிக வகுப்புகளை நடாத்தியிருந்ததுடன், சந்தேக நபரின் மனைவியான ஆசிரியையுடன் நெருக்கமான உறவையும் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆசிரியையின் கணவர், அநுராதபுரம் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையில் கடமையாற்றுகிறார். தனது மனைவியுடன் ‘பழகிப் பார்ப்பதை’ நிறுத்துமாறு சந்தேகநபர், அதிபரிடம் பலமுறை கூறியும் அவர் நிறுத்தவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அதன் பின்னர் தனது மூத்த சகோதரருடன் இணைந்து, அதிபரை ஆட்களற்ற வீடொன்றிற்கு அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியுள்ளார்.
தாக்குதலைத் தொடர்ந்து அதிபரிடமிருந்து 125,000 ரூபா பெறுமதியான இரண்டு மோதிரங்கள், 45,000 ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசி மற்றும் 13,000 ரூபா பெறுமதியான கைக்கடிகாரம் என்பனவற்றை சந்தேகநபர்கள் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் 3 மணித்தியாலங்கள் அதிபர் தாக்கப்பட்ட பின்னர், அதிபர் வந்த அதே காரில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். பின்னர் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையில் பணிபுரியும் ஆசிரியையின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தாக்குதலில் ஈடுபட்ட அவரது மூத்த சகோதரர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.