உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பிரதான விசாரணை அதிகாரி ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அண்மையில் உதவி பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்வு பெற்ற குறித்த அதிகாரி அமெரிக்காவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் தேசிய பாதுகாப்பு சபையில் தெரிவித்துள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது பெயரிடப்பட்ட சாரா ஜஸ்மின் என்ற புலஸ்தினி மகேந்திரன் மன்னாரில் இருந்து படகில் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதாக ஈஸ்டர் ஆணைக்குழுவுக்கு அறிவித்தது குறித்த அதிகாரிதான்.
சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் இருந்து சாரா தப்பிச் சென்றதை தனது உளவாளிகள் இருவர் நேரில் பார்த்ததாகக் கூறி உளவுத்துறையினரின் சாட்சியத்தை அந்த அதிகாரி ஆணைக்குழுவில் முன்வைத்தார்.
இந்த அதிகாரிதான் சாரா ஜாஸ்மின் பொலிஸ் பரிசோதகரால் அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவித்தார். இதன்படி, பொலிஸ் பரிசோதகர் அபுபக்கரை அந்த அதிகாரி கைது செய்தார்.
இரண்டு ஆண்டுகளாக தடுப்புக் காவலில் இருந்த பொலிஸ் பரிசோதகர் அபுபக்கர் பொய் சாட்சியம் அளித்து சிறையில் அடைக்கப்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
பதவி உயர்வு எதிர்பார்த்து ஆணைக்குழுவில் பொய்யான சாட்சியங்களை தயாரித்த குற்றச்சாட்டில் உயிர்த்த ஞாயிறு விசாரணை அதிகாரி ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரும் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு விசாரணை ஆணைக்குழுவின் நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி, சம்பவம் நடந்த போது இரண்டு உளவாளிகளும் பல மாதங்களாக வவுனியா மற்றும் கிழக்கு மாகாணத்திற்கு வெளியே இருந்துள்ளனர்.
பின்னர் இரு உளவாளிகளின் விசாரணையின் போது உயிர்த்த ஞாயிறு விசாரணை அதிகாரியின் வேண்டுகோளின் பேரில் பொய்யான சாட்சியங்களை வழங்கியதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
இதன்படி, உயிர்த்த ஞாயிறு விசாரணை ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய பொலிஸ் பரிசோதகர் அபுபக்கர் வீண் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்குமாறு பொலிஸ் திணைக்களம் சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
எவ்வாறாயினும், உயிரித்த ஞாயிறு விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் அதிகாரி திணைக்களத்திற்கு அறிவிக்காமல் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.