பண்டாரகம – அட்டுலுகம சிறுமி பாத்திமா ஆய்ஷா அக்ரமிற்கு நேர்ந்த கொடுமை மீண்டும் நிகழாத வகையில் சிறுவர்களை பாதுகாப்பற்ற இடங்களுக்கு அனுப்புவதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும் என சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கோரியுள்ளது.
சிறுமி பாத்திமா ஆய்ஷா அக்ரமின் கொலையுடன் தொடர்புடைய 29 வயதான சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டமையை அடுத்து அவரை இரண்டு நாட்கள் தடுத்து வைத்து விசாரணக்கு உட்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சிறுமியின் உறவினரான, குறித்த சந்தேகநபர், 3, 5, மற்றும் 8 ஆகிய வயதுகளை கொண்ட பிள்ளைகளின் தந்தையாவார். அத்துடன் அவரது மனைவி தற்போது கருவுற்றிருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. தம்மால் குறித்த சிறுமி கொலை செய்யப்பட்டதாக, அவர் காவல்துறையில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
பொருட்களை கொள்வனவு செய்வதற்காக சிறுமி பாத்திமா ஆயிஷா கடந்த 27ம் திகதி வீட்டுக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு சென்றிருந்தார். இதன்பின்னர், அவர் காணாமல் போயிருந்தார். பல மணிநேரம் கடந்தும் சிறுமி ஆயிஷா வீடு திரும்பாத நிலையில் அது தொடர்பில் அவரது பெற்றோர் பண்டாரகமை காவல்துறையில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இதனையடுத்து குறித்த சிறுமி தமது வீட்டிற்கு அருகில் உள்ள சதுப்பு நிலம் ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இந்தநிலையில், இவ்வாறான கொடுமைகள் மீள இடம்பெறாத வகையில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதய குமார அமரசிங்க தெரிவித்தார்.
சிறுமி பாத்திமா ஆய்ஷா, தமது பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் சென்றிருந்தால் இவ்வாறு நேர்ந்திருக்காது. இவ்வாறு மீள நிகழாத வகையில் சிறுவர்களை பாதுகாப்பற்ற இடங்களுக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும். சந்தேகத்திற்குரிய நபர்களுடன் சிறுவர்கள் பேசுவதை தடுக்க வேண்டும்.
நன்கு அறிந்தவர்களினால் சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே, அவ்வாறான செயற்பாடுகள் நிகழாத வகையில் பெற்றோர்கள் செயற்பட வேண்டும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதய குமார அமரசிங்க தெரிவித்தார்.
இதேவேளை, கொலை செய்யப்பட்ட சிறுமி பாத்திமா ஆய்ஷா அக்ரமின் இறுதி கிரியை நேற்று இடம்பெற்றது.