வாட்ஸ்அப்-பில் அனுப்பிய மெசேஜ்களை எடிட் செய்யும் புதிய வசதியை மெட்டா நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ்அப்-பில் புதிய அப்டேட்
சமூக தொடர்பு ஊடகமான வாட்ஸ்அப்-பில் புதிய அம்சங்களை அதன் தாய் நிறுவனமான மெட்டா தொடர்ந்து வழங்கி வருகிறது.இதன் மூலம் பயனர்களின் அனுபங்களை மெட்டா நிறுவனம் மேலும் சிறப்பித்து வருகிறது.அந்த வகையில் தற்போது பிறருக்கு அனுப்பிய மெசேஜ்களை பயனர்கள் எடிட் செய்யும் வசதியை வழங்கும் பணியில் வாட்ஸ்-அப் ஈடுபட்டு வருகிறது.
இந்த புதிய வசதியின் மூலம் பயனர்கள் தாங்கள் அனுப்பிய மெசேஜ்களை டெலிட் செய்வதற்கு மாற்றாக அதில் ஏற்பட்டுள்ள பிழைகளை மட்டும் திருத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெசேஜ்கள் அனுப்பியது முதல் 15 நிமிடங்கள் வரை எடிட் செய்து கொள்வதற்கான கால அளவும் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு எடிட் செய்த மெசேஜ்கள் குறித்த தகவல், அதனை அனுப்பியவர் மற்றும் அதை பெறுபவர் என இருவருக்கும் குறியீட்டு காட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் யாருக்கு இந்த வசதி
இந்த புதிய அம்சம் வாட்ஸ்-அப்பின் சமீபத்திய வெர்ஷனில் மட்டுமே வழங்கப்படும் என்றும் , அதிலும் குறிப்பாக இந்த அம்சம் முதலில் ஐஓஎஸ் பயனர்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
விரைவில் அது பீட்டா வெர்ஷனுக்கும், பின் எதிர்கால அப்டேட்களில் அனைவருக்கும் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இது தவிர வாட்ஸ்அப் ஐஓஎஸ் வெர்ஷனில் வீடியோ மெசேஜ் அம்சமும் வழங்கப்பட இருக்கிறது, இதன் மூலம் பயனர்கள் அதிகபட்சம் 60 வினாடிக்கு சிறிய வீடியோ மூலம் தகவல்களை அனுப்பலாம்.