QR குறியீட்டு முறையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் நடைமுறை தொடர்ந்து தடையின்றி முன்னெடுக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் நிச்சயமற்ற சூழ்நிலை காரணமாக இந்த நடைமுறை தொடர்வதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயுர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.
QR முறையின் கீழ் எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்தவோ அல்லது அதில் மாற்றங்களை மேற்கொள்ளவோ அரசாங்கம் இதுவரை எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
QR குறியீட்டு முறை
எனவே, தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருள் விநியோக முறைமையை எவ்வித தடையுமின்றி தொடர்ந்து முன்னெடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
QR முறையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் காணப்படும் சில கவலைகளுக்கு எந்தவித அடிப்படையும் இல்லை எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த எரிபொருள் நுகர்வை மிகவும் முறையானதும் திறமையானதுமான முறையில் நிர்வகிப்பதே QR எரிபொருள் விநியோகத் திட்டத்தின் பிரதான நோக்கம் எனவும் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
மேலும், பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் வகையில், தற்போது பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப முறைமையில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படாது எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது.

