தலங்கம, அக்குரகோட இராணுவத் தலைமையகத்திற்கு அருகில் வைத்து சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகள் பயணித்த மோட்டார் காரைச் செலுத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபரைக் கண்டறிவதற்குப் பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.
சந்தேகநபர் பரகொட, இமதுவ பிரதேசத்தைச் சேர்ந்த ‘களு ஆரச்சிகே லியனகே நிலுக்ஷ வீரசிங்க’ (29 வயது) எனப் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
கடந்த பெப்ரவரி மாதம் 16ஆம் திகதியன்று, அக்குரகோட இராணுவத் தலைமையகத்திற்கு அருகில் வைத்து, மோட்டார் காரில் வந்த அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள், ரி-56 (T-56) மற்றும் கைத்துப்பாக்கிகளைப் பயன்படுத்தி இந்தச் சட்டத்தரணியையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றிருந்தனர்.
துப்பாக்கிதாரிகள் வந்த மோட்டார் காரைச் சந்தேகநபரான இவரே செலுத்தியுள்ளார் என்பது பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எனவே, இந்தச் சந்தேகநபர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், மேல் மாகாண தெற்கு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியின் 0718596065 என்ற தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு தகவல் வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேல் மாகாண தெற்கு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

