முள்ளிவாய்க்கால் — மறக்க முடியாத மே 18
எதை மறப்பது நாம்…
2009 மே பதினெட்டின்
எரியும் விடியலை மறப்பதா?
அல்லது
இரத்தம் குடித்த மண்ணின்
அழுகுரலை மறப்பதா?
இசைப்பிரியாவை
சீரழித்து கொன்ற அந்த
மிருக மனிதத்தையா மறப்பது?
அவள் கண்களில் இருந்த
அந்த இறுதி பயத்தை
எப்படி மறப்பது?
சிறுவன் பாலச்சந்திரனுக்கு
பிஸ்கட் கொடுத்து
பின்னர் சுட்டுக் கொன்ற
கொடூர சிரிப்பையா மறப்பது?
ஒரு குழந்தையின் மார்பில்
படிந்த குண்டுத்துளிகள்
இன்னும் தமிழின் இதயத்தில்
எரிகின்றன.
ரமேஸ் அண்ணாவை
சித்திரவதை செய்து
எரித்து கொன்றதை மறப்பதா?
உங்கள் கைகளே எடுத்த
புகைப்படங்களும் காணொளிகளும்
உங்களின் கொடூரத்தை
உலகுக்கு சாட்சியமாக்கின.
தெரிந்தவை இவ்வளவு என்றால்
தெரியாமல் புதைக்கப்பட்ட
எத்தனை உயிர்கள்?
எத்தனை சகோதரிகள்?
எத்தனை சகோதரர்கள்?
கடலும் கூட எண்ண முடியாமல்
அலைகளாய் அலறுகிறது.
“நாளை தொடர்பு எடுப்பேன்…
எடுக்கவில்லை என்றால்
இல்லை என்று நினையுங்கள்…”
என்று கூறிச் சென்ற
அந்த இறுதி வார்த்தைகள்
இன்றும் காதுகளில்
கண்ணீராய் ஒலிக்கின்றன.
“பிள்ளைகளை அனுப்புகின்றோம்…
பார்த்துக்கொள்ளுங்கள்…”
என்று நம்பிக்கையோடு
கையளித்தவர்கள் எங்கே?
இராணுவத்திடம்
சரணடைந்தவர்கள் எங்கே?
வெள்ளைக்கொடியுடன் வந்த
உயிர்கள் எங்கே?
1956 முதல்
2009 மே 18 வரை
ஒரு இனத்தை
திட்டமிட்டு அழித்த
இருண்ட வரலாறு
தமிழின் நெஞ்சில்
நெருப்பாக வாழ்கிறது.
போராடினோம்…
ஆனால் உலகம்
வஞ்சனை செய்தது.
உண்மையை கண்டும்
மௌனமாக நின்றது.
உலகமே…
உனக்கு கண்கள் இல்லையா?
அல்லது
தமிழின் கண்ணீர்
உனக்கு தெரியவில்லையா?
இன்று
முள்ளிவாய்க்காலின்
பதினேழாம் ஆண்டு நினைவு.
ஆண்டுகள் கடந்தாலும்
அந்த மே மாத இரத்த வாசனை
இன்னும் மண்ணில் காயவில்லை.
நாம் மறக்க மாட்டோம்…
மண்ணில் விழுந்த
ஒவ்வொரு தமிழுயிரையும்.
நாம் மன்னிக்க மாட்டோம்…
இன அழிப்பின்
அமைதியான முகங்களையும்.
முள்ளிவாய்க்கால்
ஒரு பெயர் அல்ல…
தமிழரின் இதயத்தில்
என்றும் அணையாத
ஒரு தீக்கதிர்.

