கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் பீக்கரின் பகுதியில் விமான நிலையம் அமைக்கப்படாது என மத்திய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
போக்குவரத்து அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த அரை நூற்றாண்டு காலமாக குறித்த பகுதியில் விமான நிலையம் ஒன்றை அமைப்பது குறித்து அடிக்கடி பேசப்பட்டு வந்தது.
இதற்காக மத்திய அரசாங்கம் பாரியளவு காணியை ஒதுக்கீடு செய்திருந்தது, தற்பொழுது குறித்த காணியை பூங்காக்கள் அமைப்பதற்கு பயன்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1972 ஆம் ஆண்டு விமான நிலையம் அமைக்கும் நோக்கில் டொரன்டோவிற்கு வடகிழக்கு பகுதியில் காணி ஒதுக்கப்பட்டது.
அதன் பின்னர் ஆட்சி பொறுப்பினை ஏற்றுக் கொண்ட அரசாங்கங்கள் இந்த விமான நிலையம் அமைப்பது தொடர்பில் காலத்திற்கு காலம் வாத பிரதிவாதங்களை மேற்கொண்டிருந்த போதிலும் விமான நிலையம் அமைக்கப்படவில்லை.
இவ்வாறான ஓர் பின்னணியில் குறித்த காணியில் விமான நிலையம் அமைக்கப் போவதில்லை என போக்குவரத்து அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இந்த விமான நிலையம் அமைப்பதற்காக கனடிய போக்குவரத்து முகவர் நிறுவனம் சுமார் 8700 ஏக்கர் காணியை ஒதுக்கி வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பூங்காக்களை அமைப்பது தொடர்பில் பொதுமக்கள் மற்றும் பழங்குடியின சமூகத்தினருடன் கலந்தாலோசனை செய்ய உள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.