கருணா என்கிற விநாயகமூர்த்தி முரளிதரன் என்பவர் பொதுமக்கள் மீது கைத்துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஈச்சையடி தடான எனும் பிரதேசத்தில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா என்கிற விநாயகமூர்த்தி முரளிதரன் அப்பகுதியில் விவசாயம் செய்து வரும் விவசாயிகள், தனது கைத்துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தல் விடுத்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
வயல் காவலாளி பலி
இன் நிலையில் கருணாவால் போடப்பட்ட சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி வயல் காவலாளி ஒருவர் பலியான சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஈச்சையடி தடான பகுதியில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் கருணா என்கிற முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் என்பவர் தனது வயல் பாதுகாப்புக்காக சட்ட விரோத மின்சார வேலிகளை அமைத்துள்ளார்.
அதோடு குறித்த மின்சார வேலியால் அப்பகுதியில் விவசாயம் மற்றும் பண்ணை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருந்த நிலையில் அது குறித்து கேள்வி எழுப்பிய பொதுமக்களை தனது கைத்துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தியும் உள்ளார்.
இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் வாழ்ந்து வந்த நிலையில் கருணாவின் சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி இரு வாரங்களுக்கு முன்பு பெறுமதியான பசுமாடு ஒன்று உயிரிழந்த போது கருணாவுக்கு பயந்து அப்பகுதி மக்கள் பொலீசில் முறைப்பாடு செய்யாத நிலையில் தற்போது அதே மின்சார வேலியில் சிக்கி வயல் காவலாளி ஒருவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் கருணா மீது மிகுந்த கோபத்தில் உள்ளனர். வாகன போக்குவரத்து அற்ற மேற்படி பிரதேசத்தில் உள்ள மக்களின் சுமார் 80 ஏக்கர் காணிகளை அடாத்தாக பிடித்து கருணா விவசாயம் செய்துவருகின்றார்.
தனது விவசாய நடவடிக்கைகளுக்காக பாதைகளை மறித்து சட்டவிரோதமாக மின்சார வேலி அமைத்துள்ளதால். அப்பகுதியில் விவசாயம் மற்றும் பண்ணை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் உயிர் அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கருணாவின் சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்த பொது மகனின் பிரேதத்தை கொண்டு செல்வதற்கு வாகனம் இல்லாத நிலையில் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு உயிரிழந்தவரின் உடலை இளைஞர்கள் சுமந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.