இலங்கையில் முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது கல்வி மற்றும் தொழில் தகைமைகளை பொதுமக்களின் பார்வைக்காக வெளிப்படுத்தியுள்ளனர்.
225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 208 பேர் தங்களின் கல்வித் தகைமை அல்லது தொழில் தகைமை அல்லது இரண்டையும் நாடாளுமன்ற செயலகத்திற்கு அறிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற அதிகாரிகள் முதலில் இந்த தகவலை வெளியிட மறுத்ததை அடுத்து தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு அந்த தகவலை வெளியிட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
உறுப்பினர்களின் கோப்பகத்தின் கீழ் www.parliament.lk என்ற நாடாளுமன்ற இணையதளத்தில் விவரங்களை பொதுமக்கள் பார்வையிடலாம்.
முன்னதாக அரசியலமைப்பின் 90 மற்றும் 91 ஆவது பிரிவுகளின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகுதிகள் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான முன்நிபந்தனையாக ‘அங்கீகரிக்கப்படவில்லை’.
எனவே தகுதிகளை வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லாதிருந்தது. இந்த நிலையில் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் உத்தரவுக்கமைய, இந்த தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற இணையத்தளத்தின்படி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட 17 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கல்வி மற்றும் தொழில் தகுதிகளை சமர்ப்பிக்க தவறியுள்ளனர்.
6 நாடாளுமன்ற உறுப்பினர்களின் உயர் கல்வித் தகுதி சாதாரண தரம் (O/L) என இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
52 நாடாளுமன்ற உறுப்பினர்கள் க.பொ.த உயர்தரத்தை தமது உயர் கல்வித் தகைமையாகக் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், சிலர் ‘உயர்தரம் வரை’ என்று குறிப்பிட்டுள்ளதால், அவர்கள் உயர்தரத்தில் சித்தி பெற்றனரா என்பதை உறுதிப்படுத்தாததால் இந்த எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியாதுள்ளது.
23 நாடாளுமன்ற உறுப்பினர்கள் டிப்ளோமாக்களை தங்களின் உயர்ந்த கல்வித் தகுதியாக பட்டியலிட்டுள்ளனர்.
70 பேர் தாங்கள் இளமாணி அல்லது பட்டதாரிகள் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இணையத்தளத்தில் உள்ள தரவுகளின்படி 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதுமாணி பட்டங்களை தங்களின் மிக உயர்ந்த கல்வித் தகுதியாக குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் உயர் கல்வித் தகுதியாக கலாநிதி பட்டத்தை பெற்றுள்ளனர்.