கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற 5 வீதி விபத்துகளில் இளைஞர் ஒருவர் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்துக்கள் அனைத்தும் நேற்று (08) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலி வீதியில் பம்பலப்பிட்டியிலிருந்து கொள்ளுப்பிட்டி நோக்கி பயணித்த ஜீப் வண்டியும் அதே திசையில் பயணித்த காரும் சாரதிக்கு கட்டுப்படுத்த முடியாமல் ஜீப்பின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்தில் காரின் பின் இருக்கையில் பயணித்த ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பத்தரமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கேகாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – கண்டி வீதியின் 75 ஆவது தூணுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 55 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், மாவனல்லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணேதென்ன உடமாகடவர வீதியில் துனுகம கந்த பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 44 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உடமாகடவர நோக்கி துவிச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் வீதியில் மிகவும் செங்குத்தான இடத்தில் துவிச்சக்கரவண்டியின் பிரேக் பழுதடைந்தமையினால் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த கால்வாயில் விழுந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, ருவன்வெல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கேகாலை – அவிசாவளை வீதியில் முதுகமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 45 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அவிசாவளையில் இருந்து பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வளைவு பகுதியில் பயணித்த போது எதிர் திசையில் இருந்து வந்த துவிச்சக்கர வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, பதுரலிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அத்வெல்தொட்ட அபேகொட கிளை வீதியின் மலைப்பாங்கான பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 58 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்வெல்தொட்டயிலிருந்து அபேகொட நோக்கிச் சென்ற உரம் ஏற்றிச் சென்ற லொறி ஒன்று பின்னோக்கிச் சென்று வீதியின் குறுக்கே கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது லொறியின் முன் இடது ஆசனத்தில் பயணித்த நபர் லொறியில் இருந்து தூக்கி வீசப்பட்டு லொறியின் சிக்குண்டு படுகாயமடைந்த நிலையில் பதுரலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.