ஒழுங்குமுறைப்படுத்தலுடன் தேசிய கொள்கைகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு தேசிய கொள்கைகள் ஆணைக்குழுவை அமைப்பதற்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்காக ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக தலைமையில் உப குழுவொன்றை அமைப்பதற்கு அண்மையில் (01) நடைபெற்ற குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இந்த உபகுழுவின் ஏனைய உறுப்பினர்களாகப் பிரதமரின் செயலாளர் அநுர திசாநாயக, பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன ஆகியோரும், நிதி அமைச்சு, சுகாதார அமைச்சு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களம், சட்ட வரைஞர்கள் திணக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளை நியமிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் (01) கூடிய இக்குழுவில் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக, பிரதமரின் செயலாளர் அநுர திசநநாயக மற்றும் பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயதுன்ன உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.
கொள்கைகளைத் தயாரித்தல், நடைமுறைப்படுத்தல் மற்றும் கண்காணிப்பதற்கு சுயாதீன நிறுவனமாக சட்டத்தின் ஊடாக இந்த ஆணைக்குழுவை அமைக்க எதிர்பார்த்திருப்பதாகவும், இது தொடர்பான அடிப்படைக் கட்டமைப்பை ஜனவரி மாத நடுப்பகுதியில் தயாரித்து முடிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் உப குழுவின் தலைவர் கௌரவ நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது மற்றும் ஒழுங்குமுறைப்படுத்துவது, கண்காணிப்பதற்கான முழுமையான சட்ட ரீதியான அதிகரம் இந்த ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட வேண்டும் என இங்கு கருத்துத் தெரிவித்த அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இதுபோன்ற சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்து வெற்றிபெற்ற ஏனைய நாடுகளின் கட்டமைப்புக்களை ஆராய்ந்து இது தொடர்பான திட்டங்களைத் தயாரிப்பதன் அவசியம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.