இலங்கையில் 200க்கும் மேற்பட்ட யுவதிகளின் பேஸ்புக் கணக்குகளை ஊடுருவி அச்சுறுத்திய மாணவனை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட பொலிஸ் குழு நேற்று கைது செய்துள்ளது.
இந்த மாணவன் யுவதிகளின் பேஸ்புக் கணக்கிற்குள் சென்று யுவதிகளின் தனிப்பட்ட புகைப்படங்களை திருடி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக அச்சுறுத்தி பணம் கொள்ளையடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கேகாலையை சேர்ந்த குறித்த மாணவன் உயர்தரப் படிப்பை முடித்தவர் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர். உலகின் பிரபல Brandகளை கொண்ட பெண்களின் உள்ளாடைகளை விற்பனை செய்யும் பேஸ்புக் கணக்கை திறந்து இந்த மாணவன் இவ்வாறான மோசமான செயலில் ஈடுபட்டுள்ளார்.
பேஸ்புக் கணக்கின் ஊடாக உள்ளாடைகளை கொள்வனவு செய்ய விண்ணப்பிக்கும் யுவதிகளை ஏமாற்றி அவர்களது முகநூல் கணக்கின் இரகசிய இலக்கங்களை திருடி அவர் இந்த செயலை செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பேஸ்புக் கணக்குகளின் இரகசிய குறியீடுகளை திருடிய இந்த மாணவர், கணக்குகளுக்குள் ஊடுருவி அதில் உள்ள வெளியிடப்படாத புகைப்படங்கள் மற்றும் தகவல்களை சேகரித்து பெண்களை பயமுறுத்தி பணம் பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில், குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய, நீண்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கைது செய்யப்பட்டதன் பின்னரே சந்தேக நபர் ஒரு மாணவர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.