யாழ்ப்பாணம் வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்த பெருவிழா இடம்பெற்று வரும் நிலையில் ஆலயத்திற்கு மாலை வேளைகளில் வருவோரில் சிலரின் செயற்பாடுகள் பக்தர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக ஆலய வீதியில் அங்க பிரதிஷ்டை செய்யும் அடியவர்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்க பிரதிஷ்டை செய்யும் வீதியில் பொறுப்பற்ற சிலர் வீதிகளில் உணவு மீதிகளை வீசி செல்கின்றனர்.
உணவுகளின் மீதிகள், கச்சான் கோதுகள், காரம் சுண்டலை சாப்பிட்ட மீதி பைகள் எனவற்றை வீசி எறிகின்றதனால் ஆலய வீதிகள் அசுத்தமாக காணப்படுகின்றன.
அதேசமயம் ஆலய சுற்று வீதிகள் யாழ். மாநகர சபை சுத்திகரிப்பு பணியாளர்களால் தினமும் இரவு வேளைகளில் சுத்தம் செய்யப்படுகின்றது. இதன்போது வீதிகளில் வீசப்பட்ட கச்சான் கோது, மிகுதி உணவுடன் வீசப்பட்ட பைகள் என்பன மணலில் புதைத்து காணப்படுவதனால் சுத்தம் செய்யும் போது சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
குப்பை தொட்டிகள்
ஆலய வீதிகளில் பெருமளவான குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ள போதிலும், இவ்வாறு சிலர்ஆலய வீதிகளில் வீசி செல்பவர்களால் பக்தர்கள் உள்ளிட்ட ஆலயத்திற்கு வருவோர் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதேவேளை, ஆலயத்திற்கு மாலை வேளைகளில் வரும் ஒரு சில இளைஞர் குழுக்கள் அதிக சத்தம் எழுப்பும் கோர்ன்களை மக்கள் மத்தியில் ஊதி செல்கின்றனர்.
இதனால் வயதானவர்கள் குழந்தைகள் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். அத்துடன் ஆலய சூழலில் யாசகம் பெறும் சிலர் மது போதையில் யாசகம் பெற்று வருவதுடன் ஆலயத்திற்கு செல்வோருக்கு இடையூறுகளையும் விளைவித்து வருகின்றனர். இவ்வாறு ஆலயத்திற்கு வருவோருக்கு இடையூறு விளைவிக்கும் முகமாக செயற்படுவோருக்கு எதிராக பொலிஸார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆலயம் செல்லும் பக்தர்கள் கோரியுள்ளனர்.
எதிர்வரும் நாட்களில் விசேட திருவிழாக்கள் நடைபெறவுள்ளதுடன் எதிர்வரும் வியாழக்கிழமை தேர்த்திருவிழாவும் மறுநாள் வெள்ளிக்கிழமை தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில், ஆலயத்திற்கு புலம்பெயர் நாடுகள், வெளிமாவட்டங்கள் என பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்து நல்லூர் முருகனை தரிசிக்கவுள்ளனர். இந்த நிலையில் , ஆலய சூழலை சுத்தமாக பேண உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பினரும் கோரியுள்ளனர்.