ஹெரோயின் வியாபாரி ஒருவருக்கு 15,000 ரூபா பணத்துக்கும் 1 கிராம் ஹெரோயினுக்குமாக , 15 வயதான தனது சகோதரியை விற்பனை செய்த சகோதரியைக் கைது செய்துள்ளதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான சந்தேக நபர் 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் என பொலிஸார் தெரிவித்தனர். இவர் ஹெரோயின் போதைக்கு அடிமையானவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, பணம் மற்றும் ஹெரோயின் கொடுத்து சிறுமியை பெற்றுக் கொண்ட ஹெரோயின் வியாபாரியும் 5,120 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான பெண்ணின் தாய் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த நபரே சிறுமியை பராமரித்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட ஆண் சந்தேக நபர், ஹெரோயின் விற்பனையில் ஈடுபடுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரின் வீடு சோதனையிடப்பட்டு 5,120 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போதே வீட்டிலிருந்த சந்தேக நபரின் தாயார், சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிறுமியை பொலிஸ் காவலில் எடுத்து விசாரணையை மேற்கொண்டபோதே இந்த விவகாரம் தெரிய வந்துள்ளது.