மோட்டார் சைக்கிளில் ஐஸ் போதைப்பொருளை கடத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்முனை பகுதியை சேர்ந்த சந்தேக நபர் 20 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நேற்று(3) இரவு கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு-வாழைச்சேனை காகித ஆலை இராணுவ புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கமைய அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கல்முனை பகுதியை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்கவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மட்டக்களப்பு ஓட்டமாவடி பகுதிக்கு குறித்த போதைப்பொருளை கடத்தி செல்வதற்காக தயாராக இருந்த வேளை அம்பாறை மாவட்டம் கல்முனை கடற்கரை பள்ளி அருகில் உள்ள மைதானத்தில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதான சந்தேக நபரிடம் இருந்து இரு கைத்தொலைபேசிகள், பொதி செய்யப்பட்ட 20 கிராம் ஐஸ் போதைப்பொருள், பயணம் செய்த மோட்டார் சைக்கிள் என்பன விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
விசாரணை
இதன் போது குறித்த சந்தேக நபரிடமிருந்து போதைப்பொருளை கொள்வனவு செய்வதற்காக வாழைச்சேனை காகித புலனாய்வு அதிகாரிகள் அழைப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து சந்தேக நபரை குறிப்பிட்ட இடமொன்றிற்கு வரவழைத்ததுடன் அவ்விடத்தில் மாறுவேடத்தில் சென்ற கல்முனை விசேட அதிரடிப்படையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.