நிட்டம்புவ, ஹொரகொல்ல பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் நிரப்ப மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
நேற்று இரவு 8.00 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் கிராண்ட்பாஸ் பிரதேசத்தை சேர்ந்த துவான் மில்ஷான் தாஜுடீன் என்ற 29 வயதுடைய திருமணமாகாத இளைஞரே உயிரிழந்துள்ளார்.
கொலையை செய்துவிட்டு தப்பிச் செல்ல முயன்ற முச்சக்கர வண்டி சாரதியை நேற்று அதிகாலை நிட்டம்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நிட்டம்புவ, ஹொரகொல்ல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக வரிசையில் நின்ற மோட்டார் சைக்கிளில் ஓட்டுநரை முச்சக்கர வண்டி சாரதி முந்தி சென்றமையினால் ஏற்பட்ட வாய்த்தகராறே இந்த கொலைக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
பின்னர் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வெளியே முச்சக்கர வண்டியில் காத்திருந்த சாரதி எரிபொருள் நிரப்பிய பின்னர் வெளியே வந்த மோட்டார் சைக்கிளின் ஓட்டுநரின் முதுகில் கத்தியால் குத்தியுள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்த கொலையை செய்தவர் 48 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் அவர் தப்பி செல்ல முயற்சித்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் நின்ற இருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளனர். எரிபொருள் நிலையங்களில் ஏற்படும் வாய்த்தகராறு மோதல்களாக மாறியுள்ளது. அவ்வாறான மோதலின் முதல் படுகொலை இதுவாகும்.