கொலை இடம்பெற்ற வேளை எங்கள் வீடு உயர் பாதுகாப்பு வளையத்தில் இருந்தது. அப்போது ஊரடங்கு சட்டமும் அமலில் இருந்தது. அங்கு நிறைய ராணுவ முகாம்களும் இருந்தன.
எனவே அரசாங்கத்தின் துணை இல்லாமல் யாராலும் அதை செய்திருக்க முடியாது. என 22 வருடங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் மயில்வாகனம் நிமலராஜனின் சகோதரி தெரிவித்துள்ளார்.
இலங்கை யுத்தத்தின் மையப்புள்ளியாக இருந்த யாழ்ப்பாணத்திலிருந்து செய்திகளை வழங்கி கொண்டிருந்த மயில்வாகனம் நிமலராஜன் 22 வருடங்களுக்கு முன்பு அவரது வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டார் என்பது அனைவரும் அறிந்ததே.
உள்நாட்டு போரால் இலங்கையில் பதற்றமான சூழல் நிலவிக் கொண்டிருந்த வேளை அது. பல ஆபத்துகளுக்கு மத்தியில் தொடர்ந்து போர் குறித்தும், மனித உரிமை மீறல்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகள் குறித்தும் பல ஊடகங்களுக்கு நிமலராஜன் செய்திகளை வழங்கி கொண்டிருந்தார்.
கடந்த 2000 ஆண்டு ஒக்டோபர் 19ஆம் தேதி நடந்த நிமலராஜனின் கொலை தொடர்பாக லண்டன் மெட்ரோபாலிடன் காவல்துறையின் குற்றப்பிரிவு கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி, சந்தேக நபர் ஒருவரை கைது செய்ததது.
இந்நிலையில், இந்த கொலை தொடர்பாக தற்போது ஊடகங்களில் மீண்டும் செய்திகள் வெளியாகின. ஆனால் இந்த கைது, கொலை வழக்கை முடிவுக்கு கொண்டு வருமா? குற்றவாளிகளை அடையாளம் காட்டுமா? என்பதுதான் தற்போது நிமலராஜின் குடும்பத்தினர் மற்றும் சக பத்திரிகையாளர்களின் கேள்வியாக உள்ளது.