இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி காரணமாக இன்றைய தினம் ஏழரை மணித்தியாலங்கள் மின் விநியோகத்தை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
26 வருடங்களின் பின்னர் இலங்கையில் இப்படியான நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 1996ஆம் ஆண்டிலேயே நாளாந்தம் அதிக நேரம் மின்வெட்டு ஏற்பட்டதாக எரிசக்தி நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
நெருக்கடியான நிலையில் ஏழரை மணித்தியாலங்கள் மின் விநியோகத்தை துண்டிக்க, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, இன்று முதல் பகலில் ஐந்து மணி நேரம், இரவில் இரண்டரை மணி நேரம் என இரண்டு கட்டங்களாக மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
மின்வெட்டுக்கு காரணமான அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருளை பெறுவதற்கு ஒரு வாரத்திற்குள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
அவ்வாறு செய்யவில்லை என்றால் மத்திய வங்கி மற்றும் திறைசேரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.