சிவனொளிபாதமலை பருவகாலம் ஆரம்பமாகி சுமார் இரண்டு மாத காலத்துக்குள் போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலை தரிசிக்க சென்ற சுமார் 193 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிவனொளிபாதமலைக்கு போதைப்பொருட்கள் கொண்டு செல்வதனை தடுப்பதற்காக ஹட்டன் பொலிஸ் கோட்டத்திற்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பலாங்கொடை, பொகவந்தலாவ,நோர்வூட் மஸ்கெலியா, தியகல நோர்ட்டன் உள்ளிட்ட பிரதான வீதிகளில் பல இடங்களில் பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கேரள கஞ்சா, போதை மாத்திரைகள், தடை செய்யப்பட்ட சிகரெட்டுக்கள், மதன மோதக்கய, ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த சோதனை நடவடிக்கையின் போது ஸ்டூட் என்ற பொலிஸ் மோப்பநாய் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாயின் உதவியுடன் சுமார் 87 போதைப்பொருட்கள் வைத்திருந்த நபர்களை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த காலங்களில் ஹட்டன் பொலிஸ் நிலையத்திலிருந்த கோரா என்ற நாயின் குறைப்பாட்டினை தற்போது உள்ள ஸ்டூட் மோப்ப நாய் நிவர்த்தி செய்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது சிவனொளிபாதமலை யாத்திரைக்கு கேரள கஞசாவுடன் சென்ற 13 இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாகவும், இவர்கள் ஹட்டன் நீதவான் முன்னிலையில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கைகளின் போது ஹட்டன் பொலிஸ் நிலையத்திலிருந்து சுமார் 87 பேரும், ஏனைய பொலிஸ் நிலையங்களிலிருந்து சுமார் 106 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்து வருகை தந்தவர்கள் என்றும், அவர்களில் பெரும்பாலானவர்கள் 22 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.