திருகோணமலை நகரை அண்டிய பெரும்பாலான தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களுக்கும் மேலாக தொடர் அடைமழை பதிவாகி வந்தது.
இதனையடுத்தே இவ்வாறு வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. அதன்படி திருகோணமலை நகரை அண்டிய துளசிபுரம், அலஸ் தோட்டம், முகம்மதியா நகர் மற்றும் சிறிமாபுர போன்ற பிரதேசங்களில் அரை அடிக்கு மேல் மழைநீர் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு மழை நீர் தேங்கி உள்ள பிரதேசங்களில் மக்கள் தமது வீடுகளிலேயே பாதுகாப்பாக இருப்பதாகவும், குறித்த பிரதேசங்களில் சுமார் 150இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
சரியான முறையில் வடிகாண்கள் அமைக்கப்படாமையினாலும், அமைக்கப்பட்ட வடிகாண்கள் உரிய முறையில் பராமரிப்பு இல்லாமையாலும் ஒவ்வொரு மழை காலங்களிலும் தாம் பாதிக்கப்படுவதாகவும், இது தொடர்பில் அதிகாரிகள் கவனம் எடுத்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதிக்கப்படும் பிரதேச மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.