முல்லைத்தீவிலிருந்து கொக்கிளாய் செல்லும் பாதையில் மணலாறு செல்லும் பாதை பிரிந்து செல்லும் மூன்று சந்தியில் செழிப்பாக வளர்ந்து வந்த வேப்பம் மரம் ஒன்றை வெட்டி அகற்றிவிட்டு அரச மரக்கன்று ஒன்றை அதே இடத்தில் படையினர் நாட்டியுள்ளனர்.
குறித்த பகுதியில் கடந்த சில வருடங்களாக செழிப்பாக வளர்ந்த வேப்பமரம் ஒன்று காணப்பட்டுள்ளது.
இந்த மரத்திற்கு ஆதாரமாக 2016 ஆம் ஆண்டு google street view இல் அந்த மரம் காணப்படுகின்றது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அந்த சந்தியில் காணப்பட்ட வேப்பம் மரம் இராணுவத்தினரால் வெட்டி அகற்றப்பட்டு அவ்விடத்தில் புதிதாக அரசமர கன்று ஒன்று நாட்டப்பட்டு பாதுகாப்பாக வளர்க்கப்பட்டு வருகிறது.
13 ஆம் கட்டை சந்தி என தமிழ் மக்களால் அழைக்கப்பட்டு வந்த இந்த சந்தி இப்போது படையினரால் ஹாகம்பகஸ் ஹந்தி என பெயர் மாற்றப்பட்டு அழைக்கப்பட்டு வருவதோடு அந்த சந்தியை சூழவுள்ள அனைத்து பகுதிகளிலும் 3 பாரிய படை முகாம்கள் கடந்த 10 வருடத்துக்கு மேலாக அமைக்கப்பட்டு காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதி கொக்குத்துடுவாய் கிராமத்துக்கு மிக அண்மையாகவுள்ள பகுதியாக இருப்பதோடு, இப்பகுதியை சூழவுள்ள காணிகள் பல வன திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களம், கனிய மணல் கூட்டு தாபனம் ஆகியவற்றால் ஏற்கனவே அபகரிக்கப்பட்டுள்ள பகுதியாகவும் காணப்படுகிறது.
இந்த நிலையில் செழிப்பாக நின்ற வேம்பு மரத்தை வெட்டி அகற்றிவிட்டு அரச மரத்தை நாட்டி எதிர்காலத்தில் அவ்விடத்தில் புத்தர் சிலை ஒன்றை வைப்பதற்கான முன்னாயத்தமாக இருப்பதாக பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.