எதிர்வரும் தேர்தல்களில் புதிய கூட்டணியை அமைத்து, அதன் ஊடாக போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எவ்வாறிருப்பினும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவது தொடர்பில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அகில இலங்கை மத்திய குழு கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மின்சார பிரச்சினை, சமையல் எரிவாயு பிரச்சினை, விவசாய பிரச்சினை என அனைத்திற்கும் அரசாங்கம் தீர்வு வழங்க வேண்டும். நாட்டில் காணப்படும் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு முன்வைப்பதற்கான யோசனைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
தற்போதும் நாம் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம். புதிய கூட்டணியை அமைப்பதற்காக இந்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
எதிர்வரும் தேர்தல்களுக்கு முகங்கொடுப்பதே இதன் எதிர்பார்ப்பாகும். அரசாங்கத்திலிருந்து வெளியேறுவது தொடர்பில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்றார்.
சு.க. பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) தெரிவிக்கையில்,
கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அரசாங்கத்திலிருந்து விலகுவது தொடர்பில் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் திடீரென தோன்றியவை அல்ல. 1977 இல் இருந்து பிரச்சினைகள் காணப்பட்டன.
தற்போது கொரோனா தொற்று நிலைமைகளின் காரணமாக அவை வெளிப்பட்டுள்ளன. இந்த பிரச்சினைகளுக்கான குறுங்கால மற்றும் நீண்டகால தீர்வுகள் சுதந்திர கட்சியிடம் காணப்படுகின்றன. அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து அவற்றை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளோம் என்றார்.