சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் “2020-2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை பாதுகாப்புப் படைகளால் சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை” என்ற அறிக்கை தொடர்பில், மிகவும் தீவிர கரிசனையைக் கொண்டிருப்பதாக இங்கிலாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.
கடந்த புதன்கிழமை, நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வியின்போதே இந்த விடயம், இங்கிலாந்தின் அரசாங்கத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தொழில் கட்சியின் நாாளுமன்ற உறுப்பினர் டோனியா அன்டோனியாசி (Tonia Antoniazzi )எழுப்பிய கேள்விக்கு, வெளியுறவு அமைச்சர் தாரிக் அகமது எழுத்து மூலமான பதிலை வழங்கியுள்ளார்.
இலங்கையின் தமிழ் மக்களுக்காக, இங்கிலாந்து அரசாங்கம், என்ன நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என்று டோனியா அன்டோனியாசி கேள்வி எழுப்பினார்.
தாம், அண்மையில் இலங்கைக்கு சென்றிருந்தபோது இது விடயமாக இலங்கையின் தலைவர்களிடம் எடுத்துரைத்துள்ளதாக அமைச்சர் தாரிக் அகமது தெரிவித்துள்ளார்.
ஜனவரி 18-20 திகதிகளில் தாம் இலங்கைக்கான பயணத்தை மேற்கொண்டபோது, இலங்கையின் வெளியுறவு அமைச்சர், ஜி.எல்.பீரிஸ் உட்பட்ட அரசாங்க பிரதிநிதிகளை தாம் சந்தித்தாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனிதாபிமானத்தை மேம்படுத்துவது தொடர்பான ஐக்கிய நாடுகள், மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தின்படி, இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை கண்காணிப்பதற்கு இங்கிலாந்து அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.