திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் 2252140 ரூபாய் பணத்தை திருடிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் நேற்று மூன்று சந்தேக நபர்களை முன்னிலைப்படுத்திய போது அதில் இருவரை விளக்கமறியலில் வைக்குமாறும் மற்றுமொரு பெண்ணொருவரை மூன்று இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்லுமாறும் கட்டளையிட்டார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை சிவன் கோயில் மற்றும் ஆனந்தபுரி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவருகின்றது.
கடந்த ஜனவரி மாதம் 26ஆம் திகதி திருகோணமலை தலைமைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்ற போது மோட்டார் சைக்கிளில் இருந்து 2252140 ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகத்தின் பேரில் இரண்டு ஆண்கள் உட்பட பெண் ஒருவரையும் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்ட போது அவர்களிடமிருந்து 189300 ரூபாய் பணம் பெறப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
இதனை அடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை திருகோணமலை நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்திய போதே இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.